Last Updated : 01 Aug, 2024 12:09 PM

2  

Published : 01 Aug 2024 12:09 PM
Last Updated : 01 Aug 2024 12:09 PM

நாகை: ஆம்புலன்ஸ் அனுப்பாததால் ஒருவர் உயிரிழப்பு; சிபிசிஎல் நிறுவனத்தைக் கண்டித்து பொதுமக்கள் மறியல்

பொதுமக்கள் மறியல்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் பணங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் ஆம்புலன்ஸை அனுப்பாததால் நெஞ்சுவலியால் துடித்த ஒருவர் உயிரிழந்ததாகக் கூறி பொதுமக்கள் சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் பணங்குடியில் மத்திய அரசின் பொதுத் துறையின் நிறுவனமான சிபிசிஎல் அமைந்துள்ளது. இங்குள்ள ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் அப்பகுதி பொதுமக்களுக்கு அவசர மற்றும் ஆபத்து காலங்களில் உதவிக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், பணங்குடி ஊராட்சி ஓடைமேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (34) என்பவருக்கு நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல சிபிசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸை அனுப்புமாறு ராஜ்குமாரின் உறவினர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு அங்குள்ளவர்கள் ஆம்புலன்ஸை அனுப்ப மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெஞ்சுவலியால் துடித்த ராஜ்குமார் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமாரின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் இன்று காலை ராஜ்குமாரின் உடலை எடுத்து வந்து சிபிசிஎல் நிறுவனத்திற்கு முன்பாக கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் காலை பணிக்கு வந்த சிபிசிஎல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகம் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x