Published : 01 Aug 2024 09:35 AM
Last Updated : 01 Aug 2024 09:35 AM
சென்னை: “அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டுவந்துள்ள அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமன ஊழல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள ஊழல் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காமல், வழக்கம்போல குழு அமைத்து கிடப்பில்போட்டுள்ள திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டுவந்துள்ள அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமன ஊழல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள ஊழல் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காமல், வழக்கம்போல குழு அமைத்து கிடப்பில்போட்டுள்ள திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 480 உறுப்புக் கல்லூரிகளில் ஏறத்தாழ 52,500 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவற்றில் 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றும் 353 பேராசிரியர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணிபுரிவது போன்று போலியாக கணக்கு காட்டப்பட்டிருப்பது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.
பேராசிரியர் பட்டம் தாங்கிய ஐந்து பேர் ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளில் முழுநேரப் பேராசிரியர்களாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஒரே பேராசிரியர் 32 கல்லூரிகளில் முழு நேரமாக பணியாற்றுவதாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறாக 211 பேராசிரியர்கள் ஏறத்தாழ 2,500 இடங்களில் பணிபுரிவதாகப் போலியாகக் காட்டப்பட்டுள்ளது. அதாவது, ஒரு ஆசிரியர் சராசரியாக ஒரே நேரத்தில் பத்து கல்லூரிகளுக்கு மேல் முழுநேரப் பேராசிரியராகப் பணிபுரிவதாக, பொய்யாகக் காட்டி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 175 முனைவர் பட்டம் பெற்றவர்களே இத்தகைய முறைகேடான செயலில் ஈடுபட்டுள்ளது வெட்கக்கேடானதாகும். அதுமட்டுமின்றி, 972 முழுநேர பேராசிரியர் இடங்கள் மோசடியாக நிரப்பியதை அண்ணா பல்கலைக்கழகமும் அங்கீகரித்துள்ள முறைகேடுகளையும் அறப்போர் இயக்கம் வெளிக்கொணர்ந்துள்ளது.
பேராசிரியர்கள் நியமித்ததில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை தற்போது ஒப்புக்கொண்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம், ஒரே பேராசிரியர் வெவ்வேறு ஆதார் அட்டைகளைத் தந்ததால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது. ஆதார் அட்டைதான் அனைத்துக்குமான அடையாளம் என்று அரசு கூறிய நிலையில் அதிலும் போலிகள், மோசடிகள் என்பது வெட்கக்கேடானது. ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு போலி பேராசிரியர் நியமன மோசடிகள் நடைபெற்றுள்ள நிலையில், மீண்டும் அத்தவறுகள் நிகழா வண்ணம் விழிப்புடன் பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டிருக்க வேண்டாமா? அறப்போர் இயக்கம் கண்டுபிடிக்கும் வரை அண்ணா பல்கலைக்கழகம் என்ன செய்து கொண்டிருந்தது?
வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், போலி ஆதார் அட்டைகள் அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதெல்லாம் உயர் தொழில்நுட்பத்தைக் கற்பிக்கும் ஒரு பல்கலைக்கழகமே கூறுவது வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இணைப்புக் கல்லூரிகளுக்கும் சென்று, அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக்குழுக்கள் செய்கின்ற வருடாந்திர ஆய்வின்போது இம்முறைகேடுகளை ஏன் கண்டுபிடிக்கவில்லை? பிறந்ததேதியை வைத்து அம்முறைகேடுகளைத் தற்போது உறுதி செய்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம் அதை ஏன் முன்பே செய்யவில்லை?
படித்த ஆசிரியர்களே தவறு செய்தால் படிக்கும் மாணவர்கள் எப்படி அறத்துடன் செயல்படுவார்கள்? அறிவைப் புகட்டும் கல்லூரிகளே மோசடியில் ஈடுபடுகின்றன; நல்லொழுக்கத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களே மோசடியில் ஈடுபடுகின்றனர் என்றால் மாணவர்களுக்கு எப்படி நல்ல கல்வியைப் புகட்ட முடியும்? எப்படி நேர்மையான தலைமுறையை உருவாக்க முடியும்? போலி ஆசிரியர்கள் என்றால் அங்குப் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கும்? அவர்களின் பணித்திறன் பாதிக்கப்படாதா? இதையெல்லாம் ஒரு நல்ல அரசு சிந்திக்க வேண்டாமா?
திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் இம்முறைகேடுகள் தொடர்ந்து வந்துள்ளன என்பது ‘அறப்போர் இயக்கம்’ வெளிக்கொணர்ந்துள்ள ஊழல் மூலம் உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் ஆண்ட மற்றும் ஆளும் கட்சியினரின் முக்கியப் புள்ளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் நடத்தும் கல்லூரிகள் என்பதால் இம்மாபெரும் முறைகேடுகள் அண்ணா பல்கலைக் கழக உயர்மட்ட நிர்வாகம், உயர்கல்வி அமைச்சகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழகத்தின் மிகப்பெரிய அரசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் நடைபெற்றுள்ள இம்மாபெரும் முறைகேட்டால் தமிழக மாணவர்களுக்கு தரமான பொறியியல் கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதில் தொடர்புடைய 224 கல்லூரி நிர்வாகிகள், 353 பேராசிரியர்கள் என அனைவரும் தீர விசாரிக்கப்பட வேண்டுமென்ற அறப்போர் இயக்கத்தின் கோரிக்கை மிகமிக நியாயமானதே. திமுக அரசு வழக்கம்போல குழு என்ற பெயரில் காலத்தை கடத்தாமல் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படாமலிருக்க இம்முறைகேடு குறித்து விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
ஆகவே, அண்ணா பல்கலைக்கழகப் போலி பேராசிரியர்கள் நியமன ஊழல் குறித்து எவ்வித அரசியல் தலையீடுமின்றி உயர்கல்வி அமைச்சகம் முதல் உறுப்பு கல்லூரிகள் வரை அனைத்து நிலையிலும் முழுமையான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், எதிர்காலத்தில் இது போன்ற முறைகேடுகள் நடைபெறா வண்ணம் விழிப்புடன் செயலாற்ற உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT