Published : 01 Aug 2024 06:03 AM
Last Updated : 01 Aug 2024 06:03 AM
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் ஜனநாயகப் போராட்டங்கள், ஊர்வலங்கள் தடுக்கப்படுகின்றன. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்தவற்றை அமலாக்கக்கோரி போராடுபவர்களை அடக்கி ஒடுக்க காவல்துறை முயல்வது நியாயமற்றது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ‘மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தில் பணி செய்யும் ஊழியர்கள், சென்னையில் பேரணி நடத்திஅரசிடம் முறையீடு செய்ய நேற்று முன்தினம் தங்கள் ஊரில் இருந்து புறப்பட்ட 15 ஆயிரம் பெண் ஊழியர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் போராட்டங்களும்,அமைப்பு சாரா தொழிலாளர் போராட்டங்களும் காவல்துறையால் ஜனநாயக விரோதமாக ஒடுக்கப்பட்டு பங்கேற்ற ஊழியர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
சென்னையில் பேரணி நடத்துவது,ஒன்று கூடுவது, அமைச்சர்களை சந்தித்து பேசுவதுகுற்றமாக கருதி கைதுசெய்யும் போக்கை மாநில அரசு மேற்கொள்ளக் கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
கேரளத்துக்கு ரூ.10 லட்சம்: கேரள மாநிலம் வயநாட்டில், திடீரென பெய்த அதிகனமழையும், அதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவும் 80 உயிர்களை பறித்துள்ளது.மத்திய அரசு இந்தப் பேரிடருக்குதேவையான அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ரூ.10 லட்சம்நிவாரண பணிகளுக்கு அனுப்பப் படும் என்று அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT