Published : 31 Jul 2024 09:41 PM
Last Updated : 31 Jul 2024 09:41 PM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பங்கேற்காமல் தனியார் ஓட்டலில் ரகசிய கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் திமுக 22, அதிமுக 16, பாஜக 1, பாமக,1 காங்கிரஸ் 1 சுயேட்சி 4 என மொத்தம் 45 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில் ஓசூர் மாமன்ற கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் மேயர் சத்யா தலைமை வகித்தார். துணை ஆணையாளர் டிட்டோ முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அதிமுக 16 பேர் , திமுக 5 காங்கிரஸ் 1 சுயேட்சி 2 என மொத்தம் 24 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் நடந்த சிறிது நேரத்தில் 16 அதிமுக கவுன்சிலர்களும், தங்களது வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் கூட்டம் பாதியில் முடிந்தது.
இது குறித்து அதிமுக கவுன்சிலர்கள் கூறும்போது, “அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளாக எந்த வித மேம்பாட்டு பணிகளும் நடைபெறாத காரணத்தால், வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல இயலாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். மாநகராட்சியாக தரம் உயர்த்தியும், பேரூராட்சி நிலையிலேயே ஓசூர் செயல்படுகிறது" என்றனர்.
இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்காத திமுக கவுன்சிலர்கள் 19 பேர் துணை மேயர் ஆனந்தய்யா தலைமையில் தனியார் ஓட்டல் ஒன்றில் ரகசிய கூட்டம் நடத்தினர். இதன் பின்னர் மேயர் சத்யாவிடம் மனு ஒன்று அளித்தனர். அதில் புதிய ஆணையாளர் பொறுப்பு ஏற்ற பின்பு அவர் முன்னிலையில் கூட்டத்தை நடத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இது குறித்து திமுகவை சேர்ந்த சிலர் கூறும்போது, "திமுக எம்எல்ஏ., பிரகாஷுக்கும், மேயர் சத்யாவிற்கும் பனிப்போர் நடந்து வருகிறது. அதேபோல் திமுகவினரை எம்எல்ஏ பிரகாஷ் மதிப்பதில்லை, இதனால் எம்எல்ஏ மீது திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். இதனால் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் திமுகவிற்குள் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. எம்எல்ஏவின் தூண்டுதலில் மாநராட்சி திமுக கவுன்சிலர்களை கொண்டு மேயர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது. இதன் முன்னோட்டமாக மாமன்ற கூட்டத்தில் 19 பேர் பங்கேற்கவில்லை" என்றனர்.
இதுகுறித்து துணை மேயர் ஆனந்தய்யா கூறும்போது, "மாநகராட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் நடைபெறாமல் முடங்கி உள்ளது. அதிகாரிகளும் கவுன்சிலர்களை மதிப்பதில்லை, மாநகராட்சி குறைகளை தெரிவிக்க, அமைச்சர்களை சந்திக்க அழைத்து செல்வதில்லை, கூட்டம் நடத்துவதால் எந்த பயனும் இல்லை இதனால் புதிய ஆணையாளர் பொறுப்பு ஏற்ற பின்னர் அவர் முன்னிலையில் கூட்டம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் கூட்டத்தை புறக்கணித்தோம். மற்றபடி மேயர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்யவில்லை. அது தவறான தகவல்" என்றார்.
இது குறித்து மேயர் சத்யா கூறும்போது, "புதிய ஆணையாளர் பொறுப்பு ஏற்ற பின்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என 19 திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதிலும் சிலர் கூட்டத்தில் வந்து கலந்துகொண்டனர். நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவது என்பது ஒரு சிலர் நினைக்கலாம் ஆனால் மற்ற கவுன்சிலர்கள் இதற்கு ஒத்தழைப்பு தரமாட்டார்கள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT