Published : 31 Jul 2024 08:28 PM
Last Updated : 31 Jul 2024 08:28 PM
சென்னை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக, அதிமுக சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும், என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச் சரிவில் தற்போதுவரை 246 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நிலச் சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதேபோல், பொதுச் சொத்துகளுக்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இயற்கைச் சீற்றத்தின் காரணமாக வரலாறு காணாத பேரிழப்பை அப்பகுதி மக்கள் சந்தித்திருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடும் மழைப் பொழிவின் காரணமாக பேரிழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்துக்கு தேவையான நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறும்; மேலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அதிமுக ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஏழை, எளிய மக்களுக்கு தாயுள்ளத்தோடு உதவுவதிலும், அண்டை மாநிலங்களில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் உதவி செய்வதிலும் முன்னிலை வகித்து வருவதை அனைவரும் நன்கு அறிவர்.
அந்த வகையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக, அதிமுக சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT