Published : 31 Jul 2024 07:39 PM
Last Updated : 31 Jul 2024 07:39 PM
சென்னை: ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம், ஓய்வு குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ரயில்கள் இயக்கத்தில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்கள்) முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்திய ரயில்வேயில் நாடுமுழுவதும் மொத்தம் 50,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணியை முடித்த பிறகு வழங்கப்படும் 16 மணி நேர ஓய்வு மற்றும் வார ஓய்வு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. தொடர் இரவுப் பணி, கூடுதல் பணிச்சுமை ஆகியவற்றால் அவர்களின் உடல், மனநலம் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே, அவர்களுக்கு பணிக்குப் பிறகு, 16 மணி நேர ஓய்வு, வார ஓய்வு முறையாக வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம், ஓய்வுகள் குறித்து ஆராய்ந்து, ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம், ஓய்வு குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய, ஒரு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ரயில்வே வாரியத்தின் அதிகாரி, கூடுதல் உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேர் இடம்பெறுவர். இந்தக் குழு, அடுத்த ஒரு மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்யும். ரயில் ஓட்டுநர்களின் வெளி நிலையங்களில் ஓய்வு, தலைமையகத்தில் ஓய்வு, காலமுறை ஓய்வு, பணி நேரம் ஆகியவை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும், என்று ரயில்வே வாரிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்பு, ரயில் ஓட்டுநர்களின் ஓய்வு மற்றும் பணி நேரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் கழகத்தின் மத்திய அமைப்பு செயலர் பாலசந்திரன் கூறியதாவது: “ரயில் ஓட்டுநர்களின் வார ஓய்வு, இரவுப் பணிகள் தொடர்பாக ரயில்வே அமைச்சர் உறுதியளித்ததின் பேரில் ரயில்வே வாரியத்தால் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. இந்த குழு வாயிலாக, ரயில் ஓட்டுநர்களின் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT