Published : 31 Jul 2024 06:58 PM
Last Updated : 31 Jul 2024 06:58 PM

வயநாடு நிலச்சரிவில் நீலகிரியைச் சேர்ந்த மேலும் இருவர் உயிரிழப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரியைச் சேர்ந்த ஷிஹாப் மற்றும் கவுசல்யா

கூடலூர்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ், கல்யாணகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த ஷிஹாப் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவரின் உடல் பாறை இடுக்கிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்த ஷிஹாப் சூரல்மலைப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மத குருவாக பணியாற்றி வந்துள்ளார். நிலச்சரிவின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஷிஹாப் இருந்த பள்ளிவாசல் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதில் ஷிஹாப் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

குன்னூர் கரன்சி பகுதியைச் சேர்ந்த ரவிசந்திரன், சந்திரா தம்பதியின் மகள் கவுசல்யா சூரல்மலையை சேர்ந்த பிஜீஸ் என்பவருடன் திருமணமாகி அங்கு வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை இருந்தது. நிலச்சரிவில் சிக்கி கவுசல்யா, பிஜீஸ் மற்றும் குழந்தை என மூவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல்கள் அப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்

நிவாரணம்: கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த மூன்று பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில், உயிரிழந்த குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று புளியம்பாறையில் உள்ள உயிரிழந்த காளிதாஸ் குடும்பத்தை சந்தித்து, ஆறுதல் கூறி தமிழ்நாடு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார்.மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ், முன்னாள் அரசு கெளறடா பா.மு.முபாரக் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x