Published : 31 Jul 2024 06:49 PM
Last Updated : 31 Jul 2024 06:49 PM
சென்னை: மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கல்வி செயல்பாடுகளுக்காக நியமிக்கப்பட்ட தனி எழுத்தரின் பணி விவரங்களை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: 'பள்ளிகளில் கல்வி முறைகள் மற்றும் தரநிலைகளை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் ஆய்வு நடத்தப்பட வேண்டுமென தலைமைச் செயலர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாவட்டக் கல்வி ஆய்வு, கல்வி வளர்ச்சி குறைதீர் நாள், மாவட்ட கண்காணிப்புக்குழு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் போன்ற பணிகளை கண்காணிக்க எல்லா மாவட்டங்களிலும் ஆட்சியரின் கீழ் கல்வி செயல்பாட்டுக்காக தனி எழுத்தர்கள் (பெர்சனல் கிளர்க்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நியமிக்கப்பட்டுள்ள 38 மாவட்ட தனி எழுத்தர்களுக்கு கடந்த ஜூலை 18, 19-ம் தேதிகளில் சென்னையில் பயிற்சி தரப்பட்டது. தொடர்ந்து இவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 1-ம் தேதி (இன்று) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் சேர வேண்டும். அதனுடன், தனி எழுத்தரின் பணிகள் தொடர்பான வழிகாட்டுதல்களும் தற்போது வெளியிடப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு: தலைமை ஆசிரியர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், குடிமை சமூக அமைப்பினர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்களை மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டங்களுக்கு ஒருங்கிணைக்க வேண்டும்.
இதுதவிர பள்ளிகளின் செயல்பாடு, வருகைப்பதிவு, உள்கட்டமைப்பு, பள்ளிசார்ந்த சிக்கல்கள் மற்றும் ஆட்சியரின் எமிஸ் உள்ளீட்டில் தரவுகளை சேமிக்க வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறைக்கும் இணைப்புப் பாலமாக இருந்து பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். மாநில அளவில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள், செயல்பாடுகள் சரியான முறையில் பள்ளிகளுக்கு செல்வதை உறுதிசெய்யவேண்டும். இந்த விவரங்களை தனி எழுத்தர்களுக்கு தெரிவித்து சிறந்த முறையில் பணியாற்ற தேவையான அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT