Published : 31 Jul 2024 05:00 PM
Last Updated : 31 Jul 2024 05:00 PM
ஆம்பூர்: ஆம்பூர் அருகே வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் கனிம வள கொள்ளை நடப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் நேற்று செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, ஆம்பூர் வருவாய்த் துறையினர் அப்பகுதியில் ஆய்வு நடத்தி மண் திருட்டு நடைபெறாமல் இருக்க அங்கு 10 அடிக்கு பள்ளம் வெட்டி வழிப்பாதையை மூடினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனச்சரகத்தில், துருகம் காப்புக்காடுகள், மிட்டாளம் வடக்கு பகுதி ஒட்டியுள்ள பெங்கள மூலை பகுதி சுற்றிலும் காப்புக் காடுகள் நிறைந்துள்ளன. இந்நிலையில், பெங்களமூலை பகுதியையொட்டி வருவாய்த் துறைக்கு சொந்தமான புறம் போக்கு நிலங்கள் உள்ளன. இங்குள்ள புறம்போக்கு நில பகுதியிலும், வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளிலும் இரவு நேரங்களில் டிப்பர் லாரிகளிலும், டிராக்டர்களிலும் மண் கடத்துவதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டினர்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று (30-ம் தேதி) படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, ‘ஆம்பூர் வட்டாட்சியர் மோகன் தலைமையிலான வருவாய்த் துறையினர் மண் திருட்டு நடப்பதாக வந்த இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, அங்கு மண் கடத்தல் நடைபெறாமல் இருக்க ‘பொக்லைன்’ மூலம் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் வெட்டி பாதையை மூடினர்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம், ஆம்பூர் வட்டாட்சியர் மோகன் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் துத்திப்பட்டு உள்வட்டம் சின்ன வரிகம் கிராமத்தில் பெங்கள மூலை பகுதியில் வனப்பகுதி ஒட்டிய இடங்களில் இரவு நேரங்களில் முரம்பு மண் கடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் இன்று (நேற்று) அங்கு ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், பொங்களமூலை வனப்பகுதி ஒட்டியுள்ள புல எண் 213/2- ல் அனுமதி இன்றி முரம்பு மண் எடுத்ததற்காக மேற்படி நிலத்தின் உரிமையாளருக்கு கனிம வள விதிகளின் கீழ் உரிய அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு முன்மொழிவுகள் அனுப்ப நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இனி இந்த இடத்தில் மொரம்பு மண் கடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, நில உரிமை யாளர்களுக்கு அபராதத்துடன் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT