Published : 31 Jul 2024 03:16 PM
Last Updated : 31 Jul 2024 03:16 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இன்று (புதன்கிழமை) புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், பின்னர் ஆளுநர் மாளிகையிலிருந்து விடை பெற்றார்.
அவருக்கு ஆளுநர் மாளிகையில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தலைமைச் செயலர் சரத் சவுகான், டிஜிபி-யான ஸ்ரீநிவாஸ் மற்றும் அரசுச் செயலர்கள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வழியனுப்பி வைத்தனர்.
ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எந்த ஒரு வாய்ப்பும் மனிதர்களுக்கு கிடைப்பது அந்த சமூகத்துக்கு உழைப்பதற்குத்தான் என்பதை நாம் அனைவரும் உணர்ந்திக்கின்றோம். எனக்குக் கிடைத்த துணை நிலை ஆளுநர் வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு எவ்வளவு உயர்வாக பணியாற்ற முடியுமோ அந்தவகையில் பணியாற்றிய மனத்திருப்தி உள்ளது.
எழுச்சிமிகு புதுச்சேரி என்பதுதான் தாரகமந்திரமாக இருந்தது. அதனடிப்படையில் பல்வேறு நிர்வாக சீர்த்திருத்தங்கள் வேண்டும் என்பதை மனதில் கொண்டு குறுகிய காலத்தில் சில சீர்த்திருத்தங்களை செய்துள்ளோம். எனக்கு அடுத்து வரவிருக்கும் கைலாசநாதன் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். மிகச் சிறப்பாக கடந்த காலத்தில் குஜராத்தில் பணியாற்றியவர். அவருடைய முழுமையான நிர்வாகத்திறனை புதுச்சேரி மக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நிச்சயம் அவரும், முதல்வர் ரங்கசாமியும் இணைந்து புதுச்சேரி மாநிலத்தை எழுச்சிமிகு புதுச்சேரி என்ற உயர்ந்த லட்சியத்தை நோக்கி வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. புதுச்சேரியில் மிக குறைந்த காலம் தான் பணியாற்றி உள்ளேன். அந்த குறைந்த காலத்தில் நிர்வாக சீர்த்திருத்தங்களை சரிசெய்வதற்கே கடுமையான முயற்சிகளை மேற்கொண்டோம். கஞ்சாவை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்றாலும், தற்போது கஞ்சா வெகுவாக குறைந்துள்ளது.
குப்பை அள்ளுவதில் இருந்த சுணக்கங்கள் முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது. இது தொடரும்போது நிச்சயம் சுகாதாரமான, ஆரோக்கியமான, பசுமையான புதுச்சேரி என்பது நடைமுறையில் சாத்தியமாகும் என்ற மனநிறைவோடு செல்கின்றேன்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவரிடம், மீண்டும் இலவச அரிசி வழங்கும் நடைமுறையை கொண்டு வந்தது எப்படி? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “மக்கள் என்ன கேட்கிறார்களோ அதையே செயல்படுத்த வேண்டும். புதுச்சேரியில் நேரடியாக அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கும்போது சந்தையில் அரிசிக்கு பற்றாக்குறை இல்லை.
அவர்கள் எந்த அரிசியை விரும்புகிறார்களோ, அந்த வகை அரிசியை வாங்கிக்கொள்ள முடியும். ஆனாலும் அரிசிக்கான பணம் பல்வேறு வழிகளில் செலவழிந்துவிடும் காரணத்தால் அரிசி நேரடியாகக் கிடைத்தால் நல்லது என்று பல தாய்மார்கள் கேட்டனர்.அதனால் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவது அத்தியாவசியமாகி விட்டது. நம்முடைய சிந்தனைகளை எல்லாம் மக்கள் மீது திணித்துவிட முடியாது. மக்களின் சிந்தைனையோடு இணைந்து பயணிப்பதுதான் பொதுவாழ்க்கையின் அர்த்தம்” என்றார். தொடர்ந்து அவரிடம் புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு தொடர்பான கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “வந்த ஒரு நிமிடத்தில் கோப்புக்கு கையெழுத்திட்டு அனுப்பிவிட்டேன். இலாகா ஒதுக்கப்பட்டுவிட்டது. அது தொடர்பாக முதல்வரே அறிவிப்பார்” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT