Published : 31 Jul 2024 02:30 PM
Last Updated : 31 Jul 2024 02:30 PM

வயநாடு மீட்புப் பணி | தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு

சென்னை: கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கேரள மாநிலம், வயநாட்டில் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத அதி கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு 167 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த இயற்கை சீற்றத்தின் காரணமாக, பேரிழப்பை வயநாடு மக்கள் சந்தித்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இப்பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கும் படுகாயமடைந்தவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் இழப்பீட்டுத் தொகை அறிவித்துள்ளது. இந்தப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இழப்பீட்டுத் தொகை வழங்கியதுடன் கேரள மாநில அரசுக்கு ரூ.5 கோடி நிவாரணத் தொகை வழங்கியிருப்பதை வரவேற்கிறேன்.

இந்நிலையில், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட துயரமான நிகழ்வை தேசிய பேரிடராக கருதி மத்திய அரசு அதற்கு உரிய நிதியுதவி செய்வதுடன், இந்திய ராணுவத்தின் துணையோடு முழுவீச்சில் தேவையான நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பேரிடரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூலம் காசோலையாக வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கு வயநாடு மாவட்டத்திற்கு அருகில் உள்ள நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஊட்டி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினருமான ஆர்.கணேஷ் ஏற்பாட்டில் கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 80 பேர் கொண்ட மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x