Published : 31 Jul 2024 02:04 PM
Last Updated : 31 Jul 2024 02:04 PM
புதுச்சேரி: "புதுச்சேரியில் சித்தர் சுற்றுலா பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக புதுச்சேரி சித்தர் ஆலயங்கள், ஜீவசமாதிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன" என்று துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இதன் தொடக்கமாக துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் பொருளாதார சீர்த்திருத்தங்கள், உள் கட்டமைப்பு, முதலீடு போன்ற துறைகளில் இந்தியா குறிப்பிட்ட முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான நிலுவைத் தொகை, அரசு கல்வி நிறுவனங்கள், அரசு சார்பு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான நிலுவைத் தொகைக்காக மத்திய அரசு ரூ.271 கோடி வழங்கியுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் 17,500 பேர் பயன்பெற்றுள்ளனர். கடந்த நிதி ஆண்டில் நேரடி போட்டித் தேர்வுகள் மூலம் பல அரசு துறைகளில் உள்ள 1,119 பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் நிதி ஆதாரங்கள் அளவாகவே இருப்பதால் இந்த அரசு செலவினங்களை வருவாய்க்கு தகுந்தவாறு சீர் செய்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. நிதி நிலையை பொருத்தவரை 2023 - 24 ஆண்டின் மொத்த ஒதுக்கீடான ரூ.12,250 கோடியில் ரூ.11,464 கோடி அதாவது 93.58 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த செலவினம் முந்தைய ஆண்டை விட 6.55 சதவீதம் அதிகம்.
2023 - 24ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.48.052 கோடியாகும். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 7.54 சதவீதம் கூடுதலாகும். புதுச்சேரியின் தனிநபர் வருமானம் 2022 - 23ல் ரூ.2.44 லட்சத்திலிருந்து 2023 - 24ல் ரூ.2.63 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 7.61 சதவீதம் வளர்ச்சியாகும். பால் உற்பத்தியை பெருக்க முதல்முறையாக ரூ.1.23 கோடியில் 294 பால் கறவை இயந்திரங்கள் நூறு சதவீத மானியத்தில் தரப்பட்டுள்ளது.
அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி அரவிந்தரின் புத்தகப்பிரிவு 78 நூலகங்களில் நிறுவப்பட்டுள்ளது. அங்கு அரவிந்தர் புத்தகங்கள் உள்ளன. அரசிடமிருந்து உபரி மின்சாரம் விற்பனை செய்யப்பட்டு ரூ.261.2 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர எரிவாயு கொள்கை (குழாய் மூலம் எரிவாயு விநியோகம்) முதலில் காரைக்கால் பகுதியில் செயல்படுத்தப்படவுள்ளது.
சிறந்த சுற்றுலா கிராமம் 2023 விருதை திருநள்ளாறுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் வழங்கியது. புதுச்சேரியில் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். ஆன்மிக சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இடமான புதுச்சேரியில் சித்தர் சுற்றுலா பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக புதுச்சேரி சித்தர் ஆலயங்கள், ஜீவசமாதிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் புதுச்சேரியிலுள்ள 4.85 லட்சம் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களின் ஆண்டு சந்தா தொகை மொத்தமாக ரூ.92.28 லட்சத்தை அரசே செலுத்தியுள்ளது.” என்று ஆளுநர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment