Published : 31 Jul 2024 12:08 PM
Last Updated : 31 Jul 2024 12:08 PM
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத் இன்று நேரில் ஆஜரானார்.
2001-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் கணிமவளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி ஆகியோர் அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.28 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியான அப்போதைய விழுப்புரம் ஆட்சியரும், தற்போதைய தமிழக அரசின் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலாளருமான பிரஜேந்திர நவ்நீத் இன்று நேரில் ஆஜரானார். தற்போது நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
வழக்கின் முழு பின்புலம்: கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த திமுக ஆட்சியில், தமிழக அமைச்சரவையில், தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அவரது மகன் கவுதம சிகாமணி, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் தனது சொந்த பட்டா நிலத்தில் உள்ள செம்மண்ணை அள்ளுவதற்கு அரசின் அனுமதி கோரி விண்ணப்பித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தின் வானூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் இந்த செம்மண் அதிகமாக கிடைக்கிறது. விவசாய பயன்பாடுகள் மற்றும் தோட்டங்களைச் செப்பணிட இந்த செம்மண் அதிகளவில் வாங்கப்படுகிறது. அமைச்சர் பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறையை கவனித்து வந்ததால், அவருடைய மகன் கவுதம சிகாமணி, அந்தப் பகுதியில் செம்மண் எடுக்க 2007 பிப்ரவரியில் விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கான அனுமதி 2007 மே மாதத்தில், மிக குறுகிய காலக்கட்டத்துக்குள் அனுமதி வழங்கப்பட்டதாக அப்போது குற்றம்சாட்டப்பட்டது. கவுதம சிகாமணிக்கு செம்மண் அள்ளுவதற்கு அனுமதி வாங்கியபோதே, அவருடன் சேர்ந்து, அவருடைய உறவினர்களான ராஜ மகேந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகிய இருவரும் அனுமதி பெற்றுள்ளனர்.
2012ல் வழக்கு: இதைத்தொடர்ந்து, ஆட்சி மாற்றத்துக்குப் பின், அதிமுக ஆட்சிக்கு வந்தது. செம்மண் எடுத்ததாக பொன்முடி எம்எல்ஏ, கவுதம சிகாமணி எம்.பி, ராஜமகேந்திரன், லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச் சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீதான கடந்த 2012-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி செம்மண் குவாரியில் மணல் அள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
மேல்முறையீடு: இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து கீழமை நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடிக்கொள்ள உத்தரவிட்டது. அப்போது, கவுதம சிகாமணி உள்ளிட்டோர் தரப்பில், வழக்கை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்தில் விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கின் விசாரணையை வேலூர் மாவட்டத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. அதே நேரத்தில், விழுப்புரத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT