Last Updated : 31 Jul, 2024 10:32 AM

 

Published : 31 Jul 2024 10:32 AM
Last Updated : 31 Jul 2024 10:32 AM

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்: ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணைநிலை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன். படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் புதன்கிழமை (ஜூலை 31) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் பேசத் தொடங்கியதுமே திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டாக எழுந்து நின்று பேசத் தொடங்கினர்.

அவர்களிடம், “முதலில் எனது உரையை கேட்டு விட்டு தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். புதுச்சேரி சட்டப் பேரவையில் எனது முதல் உரை இது. வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் இதுவே கடைசி உரையும்” என்று குறிப்பிட்டு பேசத் தொடங்கினார் ஆளுநர். அப்படியும் சமாதானமாகாத திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ‘எதையுமே நிறைவேற்றவில்லை’ என அரசை விமர்சித்துவிட்டு பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. பேரவை தொடங்கும் முன்பு புனித நீர் மைய மண்டபத்தில் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பேரவை உறுப்பினர்கள் வரத்தொடங்கினர். முதல்வருக்கு எதிராக குற்றஞ்சாட்டிய பாஜக அதிருப்தி எம்எல்ஏ-க்களில் ஒருவரான ரிச்சர்ட் முதல்வர் ரங்கசாமி வரும்போது அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பேரவையில் உரை நிகழ்த்துவதற்காக துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்தார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து பேரவைத்தலைவர் செல்வம், ஆளுநரை வரவேற்று மைய மண்டபத்துக்கு அழைத்து வந்தார். அங்கு பேரவைத் தலைவர் இருக்கையில் ஆளுநர் அமர்ந்தார். தமிழ்தாய் வாழ்த்துடன் சபை நிகழ்வுகள் தொடங்கின.

பேரவையில் ஆளுநர் ராதாகிருஷ்ணன் பேசத்தொடங்கியபோது, எதிர்க் கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் எழுந்து நின்றனர். சிவா ஆளுநரிடம் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கினார். அதற்கு ஆளுநர், “தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அரசு தரப்பில் திருத்திக் கொள்ளட்டும். முதலில் எனது உரையைக் கேளுங்கள். தயவு செய்து அமருங்கள். இது எனது முதல் உரை. வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் இதுவே எனது கடைசி உரை. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றதற்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு பேசத் தொடங்கினார்.

பெரும்பாலும் புதுச்சேரி ஆளுநர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம். அதனால் ஆங்கிலத்தில் உரையாற்றுவார்கள். அதையடுத்து பேரவைத்தலைவர் தமிழில் உரையை படிப்பார். புதுவையில் தொடர்ந்து தமிழ் தெரிந்த ஆளுநர்கள் பதவி வகித்து வருகின்றனர். முன்பு ஆளுநராக இருந்த தமிழிசை தமிழிலில் உரையாற்றினார். அதேபோல் இந்த ஆண்டும் தமிழிலேயே ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றத் தொடங்கினார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் எழுந்து நின்று, "எதுவுமே நிறைவேற்றாமல் நிறைவேற்றியதாக படிக்கிறீர்கள்" என்று சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர். ஆளுநர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து அரசைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x