Published : 31 Jul 2024 06:29 AM
Last Updated : 31 Jul 2024 06:29 AM
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவை தள்ளிவைக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி, ஆக. 2-ம் தேதி அவரை ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டுப் பதிவுக்காக அவரை ஆஜர்படுத்த வேண்டுமென ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் குற்றச்சாட்டுப் பதிவை தள்ளிவைக்கக்கோரியும், விடுபட்ட வங்கி ஆவணங்களை வழங்கக்கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாகஇரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களுக்கு அமலாக்கத்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன், குற்றச்சாட்டுப் பதிவை 15 நாட்களுக்கு தள்ளி வைக்கக்கோரி புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். மேலும்,அவர் ஒரு வழக்கில் பிறப்பித்தஉத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் அதற்கு கீழமை நீதிமன்றம் போதிய அவகாசம் வழங்க வேண்டும். இந்த வழக்கில்குற்றச்சாட்டு பதிவு தொடங்கிவிட்டால் மேல்முறையீடு மனுக்கள் அனைத்தும் செல்லாததாகிவிடும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமலாக்கத்துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், செந்தில் பாலாஜிதரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த மனுஇன்னும் எண்ணிடப்படவே இல்லை என்றும், குற்றச்சாட்டுப்பதிவை தள்ளி வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இவ்வாறு தொடர்ச்சியாக புதிது, புதிதாக மனுக்களைத் தாக்கல் செய்வதாக குற்றம்சாட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.அல்லி, செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை தள்ளுபடி செய்து, குற்றச்சாட்டுப் பதிவுக்காக அவரை வரும் ஆக.2-ம் தேதி ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அதேபோல செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் வரும் ஆக. 2-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT