Published : 30 Jul 2024 10:02 PM
Last Updated : 30 Jul 2024 10:02 PM
மூணாறு: கனமழை காரணமாக மூணாறில் மண்சரிவு அதிகரித்துள்ளதால் மறு அறிவிப்பு வரும்வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு கிடப்பதால் தேனி-மூணாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மூணாறில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இரவும், பகலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் நயமக்காடு எஸ்டேட் பகுதியில் அதிகபட்சமாக 197 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.தொடர் மழையால் முதிரப்புழையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஹெட்ஒர்க்ஸ், கல்லாறு உள்ளிட்ட அணைகளின் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டு நீர்வெளியேற்றப்படுகின்றன. பள்ளிவாசல், பைசன்வாலி பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு மஞ்சுகுமார், சைமன் ஆகியோரது வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
அடிமாலி ஊராட்சி ஓடையில் தவறி விழுந்ததில் சசிதரன்(63) என்பவர் உயிரிழந்தார்.
பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் மூணாறு, பள்ளிவாசல், அடிமாலி, பைசன்வாலி, மாங்குளம் பகுதகளில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. தேவிகுளம் சார் ஆட்சியர் ஜெயகிருஷ்ணன் கூறுகையில், “பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மூணாறு எம்.ஜி.காலனி, அந்தோனியார் காலனி, லட்சம் காலனி உள்ளிட்ட நிவாரண முகாம்களில் 14 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் முகாம் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் அ.ராஜா முகாம்களில் தங்கி உள்ளவர்களை சந்தித்து நிவாரண ஏற்பாடுகளை செய்து தரப்படும் என்று ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், மூணாறு புதிய காலனி, இக்கா நகர், உள்ளிட்ட பல பகுதிகளிலும் மண்சரிவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. கன்னிமலை தேயிலை தொழிற்சாலை அருகே மரங்கள் சரிந்ததால் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மூணாறு கால்பந்து மைதானம், ஊராட்சி மைதானம் மற்றும் அரசு பள்ளி போன்ற பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், மூணாறு மாவட்டத்துக்கு ரெட்அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரவு நேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு நிலைமை சீராகும்வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.
தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையின் கேப்ரோடு எனும் பகுதியின் பல இடங்களிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண்திட்டுக்களும், பாறைகளும் சாலையில் விழுந்துள்ளதால் தேனியில் இருந்து பூப்பாறை வழியாக மூணாறுக்கு செல்லும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. கனமழை தொடர்வதால் அங்கு பாறைகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சீரமைப்புக்குப்பிறகே போக்குவரத்து சீராகும் என்று நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment