Published : 30 Jul 2024 06:34 PM
Last Updated : 30 Jul 2024 06:34 PM

“கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு அளிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?” - சீமான் கேள்வி

மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

சென்னை: “கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும். கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினரையும், பொதுமக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், என வலியுறுத்துகிறேன். இதன்பிறகும் தனியார் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு ஆதரவாக அரசு செயல்படுமாயின் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூடக்கோரி மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்,” என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக, கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராடிய நாம் தமிழர் கட்சியினரை கைது செய்துள்ள திமுக அரசின் அடக்குமுறை வன்மையான கண்டனத்துக்குரியது. திருமங்கலம் பகுதி மக்கள் நீண்ட காலமாக சுங்க கட்டண விலக்குகோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பிறகும், அமைச்சர் தலைமையில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையிலும் சுங்க கட்டணத்தில் விலக்கு அளிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்?

சொந்த நாட்டிலேயே 50 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் செலுத்திப் பயணம் செய்வதென்பது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்கூட இல்லாத அடிமை நிலையாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலை அமைக்கப்படும் பணிக்குச் செலவான தொகையினைவிட அதிகமாக, தொடர்புடைய நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில் வசூல் செய்துகொண்ட பிறகும், தொடர்ந்து 15, 20 ஆண்டுகளாக எவ்விதக் கணக்கு வழக்குமின்றித் தொடர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதும், அரசு அதை அனுமதிப்பதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

வசூல் செய்யப்படும் கட்டணக்கணக்கை குறைத்துக்காட்டி மிகப்பெரிய மோசடியில் சுங்கவசூல் செய்யும் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதையெல்லாம் தடுக்க ஒரு சாலை அமைக்கப்பட்டதற்கான செலவு எவ்வளவு? ஒவ்வொரு நாளும் சுங்கச்சாவடியில் வசூல் செய்யப்படும் தொகை எவ்வளவு? எத்தனை ஆண்டுகளில் அது நிறைவடைகிறது? சாலையை பராமரிக்க ஒவ்வொரு மாதமும் ஆகும் செலவு எவ்வளவு? மீதமாகும் வசூல் கட்டணம் யாருக்குச் செல்கிறது? என்பது குறித்த தகவல்கள் என யாவற்றையும் நாட்டிலுள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளும் வெளிப்படையாக அறிவிக்காதவரை சுங்கக்கட்டணம் என்பது பகற்கொள்ளையாகத்தான் இருக்கும்.

ஆகவே, கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினரையும், பொதுமக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இதன்பிறகும் தனியார் நிறுவனங்களின் கட்டணக்கொள்ளைக்கு ஆதரவாக அரசு செயல்படுமாயின் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூடக்கோரி மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x