Last Updated : 30 Jul, 2024 07:02 PM

2  

Published : 30 Jul 2024 07:02 PM
Last Updated : 30 Jul 2024 07:02 PM

தமிழகத்தில் டிஎஸ்பி பதவி உயர்வுக்காக 7 ஆண்டாக காத்திருப்பு: 80 காவல் ஆய்வாளர்கள் விரக்தி

பிரதிநிதித்துவப் படம்

மதுரை: தமிழகத்தில் டிஎஸ்பி பதவி உயர்வு கிடைக்காமல் தொடர்ந்து 7 ஆண்டுகளாக காத்திருக்கும் காவல் ஆய்வாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

தமிழக காவல்துறையில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 1997-ல் சட்டம் - ஒழுங்கு, ஆயுதப்படை, பட்டாலியன் பிரிவுகளுக்கு காலி இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தனித்தனியாக நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் உதவி ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 10 ஆண்டுகளில் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் இவர்களுக்கு டிஎஸ்பி-க்களாக பதவி உயர்வு அளிக்க பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர்களுக்கு விதிமுறையின்படி, 2017-ல் டிஎஸ்பி-க்களாக பதவி உயர்வு கிடைத்திருக்க வேண்டும். ஆனாலும், கிடைக்கவில்லை. அடுத்த ஓரிரு ஆண்டில் மீண்டும் பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரானது. இப்பட்டியலில் இடம் பெற்றவர்கள் முன்னுரிமை அடிப்படையில் சென்னை காவல்துறை பயிற்சி பள்ளியில் 6 மாத பயிற்சிக்கு பிறகு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பட்டியலில் இடம்பெற்று, பயிற்சியும் முடித்த சுமார் 80-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு சுமார் 7 ஆண்டு நெருங்கும் நிலையிலும் டிஎஸ்பி பதவி உயர்வு இன்னும் கிடைக்கவில்லை என்கிறார்கள். இதனால் இவர்கள் தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்களாகவே பணியில் நீடிக்கின்றனர். இது பற்றி காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு பல்வேறு முறை வலியுறுத்தியும் இதுவரையிலும் இவர்களுக்கு பதவி உயர்வு வந்து சேர்ந்தபாடில்லை. இதனால் 80 ஆய்வாளர்களும் விரக்தியில் இருப்பதாக புலம்புகின்றனர்.

இது தொடர்பாக பேசிய பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆய்வாளர்கள் சிலர்,"பொதுவாக சட்டம் - ஒழுங்கு, ஆயுதப்படை, பட்டாலியன் பிரிவுக்கென காவலர்கள், எஸ்ஐ-க்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். இதன்படி, கடந்த 1997 பேட்ஜில் தேர்வான எங்களுக்கு ஆய்வாளர் பதவி உயர்வு ஓரளவுக்கு குறித்த காலத்தில் கிடைத்தது. டிஎஸ்பி பதவி உயர்வு என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.

சட்டம் - ஒழுங்கு, ஆயுதப்படை பிரிவில் தேர்வானவர்களுக்கு முறையாக டிஎஸ்பி பதவி அளிக்கப்பட்டுள்ளது என்றாலும், இதிலும் சிலருக்கு கிடைக்கவில்லை. பட்டாலியன் பிரிவில் தேர்வான பெரும்பாலானோர் இன்னும் டிஎஸ்பி-யாக முடியவில்லை. பட்டியலில் முன்னுரிமை அடிப்படையில் இன்றி, ஏதாவதொரு வழக்கு மற்றும் வாரண்ட் கைது நடவடிக்கையை காரணம் காட்டி, முன்னுரிமையை பின்னுக்கு தள்ளி முன்னதாகவே பதவி உயர்வை சிலர் பெற்று இருப்பதும் தெரிகிறது.

எதுவானாலும் சரி, குறிப்பிட்ட காலத்தில் எங்களுக்குப் பதவி உயர்வு கிடைத்தால் மட்டுமே அதற்கான பணப் பலன், அந்தஸ்தை பெற முடியும். எங்கள் துறையின் அதிகாரிகள் இனிமேலும் இந்த விஷயத்தில் தாமதிக்காமல் நடவடிக்கை எடுத்தால் நல்லது" என்று ஆய்வாளர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x