Published : 30 Jul 2024 05:07 PM
Last Updated : 30 Jul 2024 05:07 PM

“கோயில் நிலம் கொள்ளை போவதை இந்து சமய அறநிலையத் துறை வேடிக்கை பார்க்கிறது” - இந்து முன்னணி குற்றச்சாட்டு

சென்னை: கோயில் நிலம் கொள்ளை போவதை இந்து சமய அறநிலையத் துறை வேடிக்கை பார்ப்பதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகில் உள்ள கிருஷ்ண பேரி எனும் இடத்தில் ஜக்கம்மா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான ரூ. 4 கோடி மதிப்பிலான இடத்தை, ஜக்கம்மா அறக்கட்டளை என்ற பெயரில் போலியாக பட்டா மாற்றம் செய்துள்ளனர். இதன் மீதான வழக்கு 2019ல் இருந்து நிலுவையில் உள்ளது.

முறைகேடாக கோயில் சொத்தை அபகரிக்க போலி பட்டா வழங்கியதை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு ரத்து செய்து, மூன்று வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. வழக்கை கடந்த ஐந்தாண்டுகளாக நிலுவையில் வைக்க துணைபோன இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியாக, கோயிலின் பெயரில் அறக்கட்டளை வைத்து ஏமாற்ற துணிந்துள்ளனர். முறைகேடாக பட்டா தருவதற்கு துணைபோன அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களது கடந்தகால அரசு துறை செயல்பாட்டை பரிசீலிக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோயில் நிலத்தை மீட்டதாக புத்தகம் புத்தகமாக கோயில் நிதியில் வெளியிட்டு தள்ளுகிறார். ஆனால் கோயில் நிலங்கள் கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு மீதான வழக்குகள் பற்றி ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடுவதில்லை? கோயில் குத்தகை பாக்கி குறித்த தகவல் பலகை கோயில் வாசலில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த திராவிட மாடல் ஆட்சி, யாரையோ காப்பாற்ற அந்த தகவல் பலகைகளை தந்திரமாக எடுக்க வைத்துள்ளது அல்லது கோயில் நிலம் கட்டிட அடிமனை குத்தகை, வாடகை பாக்கி முற்றிலும் வசூலித்து விட்டார்களா?

விருதுநகர் ஜக்கம்மா கோயில் நில மோசடி விவகாரம் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்திற்கு மக்கள் சென்றதால் தான் காப்பாற்றப்பட்டது. கோயில் சொத்துக்களை பராமரிக்க, பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை கைகட்டி வேடிக்கை தான் இதுவரை பார்த்து வந்துள்ளது என்பது இந்த விஷயத்திலும் வெளிப்படையான உண்மை. கோயில் நிலங்கள், இடங்கள் குறித்து அனைத்து விவரங்களும் கணிணி மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய எடுத்த முயற்சி குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

வக்ஃப் வாரிய சொத்துக்களை மீட்க, பாதுகாக்க மக்களின் வரி பணம் செலவு செய்யப்படுகிறது. அது சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் இந்து கோயில் சொத்துக்களை பாதுகாக்க இந்துக்களின் காணிக்கையில் நடக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலுக்கு விசுவாசமாக இல்லாமல், அரசிற்கும் அரசியல்வாதிகளுக்கும் விசுவாசியாக இருப்பது அவர்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?

எனவே, தமிழக அரசு கோயில் நில இடங்கள் ஆக்கிரமிப்பு குறித்து முழுமையான விசாரணைக்கு தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். கோயில் சம்பந்தமான சுவாமி சிலை கடத்தல் மற்றும் நில ஆக்கிரமிப்பு வழக்குகளில் அப்போதுதான் விரைவான நீதி கிடைக்கும் என இந்து முன்னணி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x