Last Updated : 30 Jul, 2024 04:03 PM

2  

Published : 30 Jul 2024 04:03 PM
Last Updated : 30 Jul 2024 04:03 PM

“கேஜ்ரிவாலை விடுவிக்கும் வரை நாம் ஓயவே கூடாது” - ஆர்.எஸ்.பாரதி பேச்சு

சென்னை: "அரவிந்த் கேஜ்ரிவாலை விடுவிக்கும் வரை நாம் ஓயவே கூடாது. அமலாக்கத் துறையை பயன்படுத்தி கைது செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் விடுவிக்கபட வேண்டும்" என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு சிகிச்சை வழங்காததை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் ஆம் ஆத்மி - இந்திய கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில், அரவிந்த் கேஜ்ரிவாலை விடுதலை செய்யக் கோரியும் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அத்துடன், "கேஜ்ரிவாலை விடுதலை செய்யும் வரை ஓயமாட்டோம்" என ஆம் ஆத்மி தொண்டர்கள் முழங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் பேசியது: "மதுபான கொள்கையில் தவறு செய்தவர் தான் சிறைக்கு போக வேண்டும். ஆனால், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக பொய் வழக்குப் போட்டுள்ளனர். அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. இந்த ஆர்ப்பாட்டம் கேஜ்ரிவாலுக்கான ஆர்ப்பாட்டம் அல்ல. எல்லோருக்குமான ஆர்ப்பாட்டம். ஜனநாயகத்தை காப்பாற்ற நடக்கும் ஆர்ப்பாட்டம். கட்சியை விட நாடு தான் முக்கியம் என்பதால், இந்தியா கூட்டணியில் இணைந்து தொடர்ந்து பயணிக்கிறோம்" என்று வசீகரன் கூறினார்.

பின்னர் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது: "இன்று அமைக்கப்பட்ட ஆட்சி மக்கள் ஆதரவளித்ததால் அமைக்கப்பட்டது அல்ல. 400 இடம் என்று போதித்து, பொய் பிரச்சாரம் செய்து அப்படியும் வெல்ல முடியாமல் இன்றைக்கு மைனாரிட்டி அரசாக மோடி அரசு இருக்கிறது. கடந்த காலத்தில் செய்த தவறுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டினர்.

பிரதமர் மோடி இந்தப் பகுதியில் ரோடு ஷோ நடத்தினர். ஒருமுறைக்கு எட்டு முறை வந்தார். 800 முறை வந்தாலும் தமிழத்தில் இடமில்லை என்பதை இங்குள்ள கட்சிகள் நிரூபித்தனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டியும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. வாராணசி தொகுதியில் மோடியின் வெற்றி சந்தேகமாக உள்ளது. பாஜக அரசு அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரை நீடிக்குமா என்பது சந்தேகமே.

அரவிந்த் கேஜ்ரிவால் என்ன ஊழல் செய்தார்... எத்தனை மாதங்கள் ஆகிறது? தேவையில்லாமல் அவரை சிறையில் வைத்து உள்ளனர். அவருக்கு போதுமான மருத்துவ வசதிகூட தரப்படவில்லை. இப்படி எல்லாம் கொடுங்கோல் ஆட்சி செய்தவர்கள் நீண்ட நாள் ஆட்சியில் இருந்தது இல்லை. கேஜ்ரிவாலை விடுவிக்கும் வரை நாம் ஓயக்கூடாது. அமலாக்கத் துறையை பயன்படுத்தி கைது செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்படவேண்டும். அதுவரை போராட வேண்டும்” என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக சட்டபேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, மதிமுக மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் அந்திரி தாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மநில நிர்வாகக் குழு உறுப்பினர் ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.சுந்தரராஜன் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x