Published : 30 Jul 2024 01:51 PM
Last Updated : 30 Jul 2024 01:51 PM

பள்ளி வளாகங்களை பாதுகாப்பானதாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: ஸ்ரீரங்கம் பள்ளியில் மோதலைத் தடுக்க முயன்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளநிலையில் மாணவர் சமுதாயம் எங்கே போகிறது? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி வளாகங்களை பாதுகாப்பானதாகவும், ஆசிரியர்கள் மதிக்கப்படும் இடமாகவும் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறயுள்ளதாவது: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற சிவக்குமார் என்ற ஆசிரியரின் தலையில் ஒரு மாணவர் அரிவாளால் வெட்டியதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இந்த மோதலில் இன்னொரு மாணவரும் காயமடைந்திருக்கிறார். இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் என்று நம்பப்படும் மாணவர் சமுதாயம் எதை நோக்கிப் பயணிக்கிறது? அவர்களின் எதிர்காலமும், தமிழகத்தின் எதிர்காலமும் என்னவாகும்? என்பன உள்ளிட்ட வினாக்கள் மனதை வாட்டிக் கொண்டிருக்கின்றன.

அன்னையும், தந்தையும் நன்னெறி தெய்வம் என்றால், அந்த நன்னெறியை கற்றுத் தரும் தெய்வங்கள் ஆசிரியர்கள் தான். கடவுளுக்கு மேல் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர்கள் அவர்கள். ஆனால், அண்மைக்காலமாக ஆசிரியர்கள் மாணவர்களால் தாக்கப்படும் நிகழ்வுகளும், ஆசிரியைகள் மாணவர்களால் அவமதிக்கப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து விட்டன. அனைவருக்கும் கவலையளிக்கும் இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டியது உடனடித் தேவையாகும்.

தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து விட்டு, கைக்கெட்டும் தொலைவில் கஞ்சா கிடைப்பதை அனுமதித்து விட்டு மாணவர்களை மட்டும் இத்தகைய சீர்கேடுகளுக்கு பொறுப்பாக்குவது சரியானது அல்ல. பேனாக்களை எடுத்துச் செல்ல வேண்டிய வயதில் பள்ளிகளுக்கு மாணவர்கள் அரிவாளுடன் செல்வது ஏன்?

வணக்கங்கள் நிறைந்திருக்க வேண்டிய மனதில் வன்முறை எண்ணங்கள் பெருகியிருப்பதற்கு காரணம் என்ன? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு விடை காண வேண்டும். அந்த அடிப்படையில் பள்ளி வளாகங்களை பாதுகாப்பானதாகவும், ஆசிரியர்கள் மதிக்கப்படும் இடமாகவும் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x