Published : 30 Jul 2024 10:30 AM
Last Updated : 30 Jul 2024 10:30 AM

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை: குற்றாலம் அருவிகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

திருநெல்வேலி/ தென்காசி/ நாகர்கோவில்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 96 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதுபோல் ஊத்து பகுதியில் 82, காக்காச்சியில் 68 மற்றும் மாஞ்சோலையில் 14 மி.மீ. மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் அணைப்பகுதிகள் மற்றும் பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

அம்பாசமுத்திரம்- 15, சேரன்மகாதேவி- 5.20, மணிமுத்தாறு- 5.40, பாபநாசம்- 16, ராதாபுரம்- 6, சேர்வலாறு அணை- 9, கன்னடியன் அணைக்கட்டு- 4.80, களக்காடு- 0.40, கொடுமுடியாறு அணை- 10.

அணைகள் நிலவரம்: மாவட்டத்தில் மொத்தம் 331.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 115.55 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,288 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 1,167 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 70.59 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 135 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 125 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் குற்றாலம்
பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி: தென்காசி மாவட்டத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் செங்கோட்டையில் 36.20 மி.மீ., குண்டாறு அணையில் 28.60, கடனாநதி அணையில் 28, அடவிநயினார் அணையில் 16, தென்காசியில் 15.20, ராமநதி அணையில் 12, ஆய்க்குடியில் 10 மற்றும் கருப்பாநதி அணையில் 5.50 மி.மீ. மழை பதிவானது.

தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 74 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 78.50 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 113.50 அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 52.17 அடியாக உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் பிரதான அருவியில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், மாலையில் ஐந்தருவியிலும், அதைத் தொடர்ந்து பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தொடர் மழையால் நேற்றும் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால், அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நேற்று மதியம் நீர்வரத்து சீரான பின்னர் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மற்ற அருவிகளிலும் நீர்வரத்தை கண்காணித்து, நிலைமைக்கு ஏற்ப பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

பழைய குற்றாலம் அருவியில் பெருக்கெடுத்து
கொட்டும் தண்ணீர்.

குமரியில் வெள்ள அபாய எச்சரிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

நேற்று அதிகபட்சமாக சுருளோட்டில் 56 மி.மீ. மழை பதிவானது. பாலமோரில் 45 மி.மீ., மாம்பழத்துறையாறில் 30, ஆனைகிடங்கில் 29, முள்ளங்கினாவிளையில் 28, பூதப்பாண்டி மற்றும் நாகர்கோவிலில் தலா 25 மி.மீ. மழை பெய்திருந்தது.

மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1,076 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், நீர்மட்டம் 44.53 அடியாக உள்ளது. அணையில் இருந்து 432 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.12 அடியாக உள்ளது. அணைக்கு 790 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 460 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதை தொடர்ந்து கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x