Published : 30 Jul 2024 05:59 AM
Last Updated : 30 Jul 2024 05:59 AM

இறப்பு, இடம் பெயர்தல் காரணமாக தமிழகத்தில் 4.49 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து: கூட்டுறவு, உணவுத்துறை செயலர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்தாண்டில் 4.54 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நகல் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 4.49 லட்சம் ஒரு நபர் குடும்ப அட்டைகள் இடம் பெயர்தல் மற்றும் இறப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு, உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான கிடங்கை கூட்டுறவு, உணவுத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்தம் 36,954 ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை மற்றும் உப்பு போன்றவைகள் போதுமான இருப்பு உள்ளது. வரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு வழங்கவும், ஒரு கோடி பாக்கெட் பாமாயில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 4.54 லட்சம் குடும்ப அட்டைதாரருக்கு நகல் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 4.49 லட்சம் தனிநபர் ஸ்மார்ட் கார்டுகள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 58 சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கடந்த ஆண்டில் 5,631 வழக்கு தொடரப்பட்டு ரூ.6.98 கோடி மதிப்பிலான 18,194 குவிண்டால் அத்தியாவசிய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ரேஷன் குறை தொடர்பான புகார்களுக்கு 044-28592828, 1967 மற்றும் 1800 1800 4255901 என்ற எண்களில் புகார் அளிக்கலாம். மேலும், www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும் புகார்கள் தெரிவிக்கலாம்.

கூட்டுறவுத் துறையின் வாயிலாக ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு பல்வேறு வகையான கடன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 1.43 லட்சம் பேருக்கு ரூ.20,807 கோடி அளவில் பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் டி.மோகன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x