Published : 30 Jul 2024 06:03 AM
Last Updated : 30 Jul 2024 06:03 AM

தமிழகம் முழுவதும் மின் பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த மின் பராமரிப்புப் பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்குமாறு அனைத்து தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:

இன்று (நேற்று) காலை நிலவரப்படி, கொடைக்கானல், ஊட்டி பகுதிகளில் கனமழை இருப்பினும், பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில், அனைத்து இடங்களிலும் பாதுகாப்புடன் கூடிய சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக ஒருசில இடங்களில் ஏதேனும் மின் தடங்கல் ஏற்பட்டாலும்கூட, உடனுக்குடன் சரி செய்து, சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில், கனமழையின் காரணமாக இதுவரை பாதிப்படைந்த 230 உயரழுத்த மின்கம்பங்களில், 200 மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன, 466 தாழ்வழுத்த மின்கம்பங்களில், 302 மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன, பாதிப்படைந்த 25 மின் மாற்றிகளில், 16 மின் மாற்றிகள் சரி செய்யப்பட்டும், மீதமுள்ள 9 மின் மாற்றிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டும் வருகிறது.

பாதிப்படைந்த பகுதிகளில் மின்சாரம் சீரமைக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள, பொறியாளர்கள் மற்றும் களப் பணியாளர்கள் உள்ளடங்கிய 250 பேர் கொண்ட குழு தற்போது களத்தில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் இம்மாதம் 1-ம் தேதி முதல் ஒருங்கிணைந்த பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, 8,813 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன. இவை தவிர, சுமார் 182 கி.மீ. பழைய மின்கம்பிகள் புதியதாக மாற்றப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள பராமரிப்புப் பணிகளை ஒருமாத காலத்துக்குள் விரைந்து முடித்திடவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இக்கூட்டத்தில், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், பகிர்மானம் இயக்குநர் கே.இந்திராணி, அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x