Published : 30 Jul 2024 05:18 AM
Last Updated : 30 Jul 2024 05:18 AM
சென்னை: அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகை யிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே அறிவித்தபடி, முற்றுகை போராட்டம் 30, 31-ம் தேதியும் தொடரும் என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துஉள்ளனர்.
பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 29-ம் தேதி (நேற்று) முதல் 3 நாட்களுக்கு சென்னை டிபிஐ வளாகத்தை (பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) அறிவித்திருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டிபிஐ வளாகத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் நேற்று அடைக்கப்பட்டன. அங்கு பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் அடையாள அட்டையை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், காலை 10 மணி அளவில் டிபிஐ வளாகத்தை முற்றுகையிடுவதற்காக சென்று கொண்டிருந்த இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்யப்பட்டனர். இது மட்டுமின்றி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேருந்து நிறுத்தங்களில் நின்றிருந்தவர்கள், வெளியூர்களில் இருந்து குழுவாக வந்து, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி டிபிஐ நோக்கி சென்றவர்கள் அனைவரும் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு, பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்டனர். மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
போராட்டத்தை தொடங்கும் முன்பாகவே கைது செய்வது ஜனநாயக விரோதம். கடந்த முறை 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தியபோது, ‘‘12 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’’ என்று தொடக்க கல்வி இயக்குநர் உறுதி அளித்தார். ஆனால், அந்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தற்போது, பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்து 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.
அரசாணையால் லட்சம் பேர் பாதிப்பு: இந்த ஒரு அரசாணையால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் ஆசிரியைகள். எனவே, இந்த அரசாணையை உடனே ரத்து செய்வதுடன், மற்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். இதுதொடர்பாக சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆசிரியர்கள் டிபிஐ நோக்கி திரண்டு சென்றதாலும், அவர்களை கைது செய்வதற்காக வரிசையாக போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாலும், கல்லூரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். டிட்டோ-ஜாக் அறிவிப்பின்படி, முற்றுகை போராட்டம் 30, 31-ம் தேதியும் (இன்று, நாளை) தொடரும் என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...