Published : 30 Jul 2024 04:15 AM
Last Updated : 30 Jul 2024 04:15 AM
சென்னை: ஆவின் சார்பில் ரூ.43.61 கோடிமதிப்பிலான பால் பண்ணைகள், ஆய்வுகம் என 4 முடிவுற்றதிட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக அரசு பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டு மே முதல் தற்போதுவரை ஆவின் நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக ரூ.94.41 கோடி செலவில் புதியபால் பதப்படுத்தும் மற்றும் பால் பாக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலைகள், புதிய ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்குகள், ஆய்வுக் கூடங்கள், பால் கொள்முதல் பிரிவுக் கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
திறப்பு, அடிக்கல்: இந்நிலையில், பால் நுகர்வோர்களுக்கு தரமான பால் தங்கு தடையின்றி கிடைக்கவழிவகை ஏற்படுத்தும் விதமாக கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் ஆகிய இடங்களில் பால் பண்ணைகள், திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பால் பண்ணையில் தயிர், மோர் தயாரிக்கும் ஆலை, மாதவரத்தில் நோய்க் கிருமிகளைக் கண்டறியும் மேம்படுத்தப்பட்ட ஆய்வகம் என ரூ.10.61 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளின் கலப்புத் தீவன தேவையைப் பூர்த்திசெய்யும் வண்ணம் கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் ரூ.33 கோடி மதிப்பில் தினசரி 300 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட கால்நடை தீவன ஆலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ம.பொடையூர் கிராமத்தில் 6.77 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள இந்த தீவனத் தொழிற்சாலையால் இப்பகுதியைச் சார்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், கடலூர், விழுப்புரம் மற்றும் அருகில்உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்குத் தரமான கலப்புத் தீவனம் கிடைக்கும்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆர்.காந்தி, சி.வி.கணேசன், மனோ தங்கராஜ், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறையின் செயலர் கே.கோபால், ஆவின் மேலாண் இயக்குநர் சு.வினீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT