Published : 29 Jul 2024 07:08 PM
Last Updated : 29 Jul 2024 07:08 PM
சென்னை: குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை, 12 பாதிப்புகளுக்கு போடப்படும் 11 வகையான தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு இலவசமாக போடப்படுகிறது. இத்தடுப்பூசிகள் காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் -ஏ குறைபாடு உள்ளிட்ட 12 பாதிப்புகளுக்கு வழங்கப்படுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் வாரம் தோறும் புதன்கிழமையில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிகள் கட்டணம் செலுத்தி வழங்கப்படுகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனைகளை போலவே, தனியார் மருத்துவமனைகளிலும் தேசிய தடுப்பூசி அட்டவணையில் உள்ள தடுப்பூசிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை 11 வகையான தடுப்பூசிகள் 12 வகையான பாதிப்புகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சில தடுப்பூசிகளையும் சேர்த்து 18 வயது வரை போடப்படுகிறது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் வசதி உள்ளிட்ட கட்டமைப்புகள் உள்ள தனியார் மருத்துவமனைகளை கண்டறிந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, எவ்வித கட்டணமும் பெறாமல் இலவசமாக தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உத்தரவாதம் அளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் செயல்படும். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT