Published : 29 Jul 2024 06:05 PM
Last Updated : 29 Jul 2024 06:05 PM
உதகை: யூடியூபர் சவுக்கு சங்கரை, ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சவுக்கு சங்கர், ‘சவுக்கு மீடியா’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில், விவாத நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இதுதவிர பல்வேறு தனியார் யூடியூப் சேனல்களின் விவாதங்களில் பங்கேற்று அரசியல் தொடர்பான கருத்துகளை பேசியும் விமர்சித்தும் வந்தார். அப்படி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸார் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் சைபர் க்ரைமில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கடந்த மே 4-ம் தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து அவரைக் கைது செய்தனர். கோவையைத் தொடர்ந்து சென்னை, சேலம், திருச்சி என அடுத்தடுத்து பெண் போலீஸார் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தனர். இப்புகார்களின் அடிப்படையில் பேரில் மேற்கண்ட மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பெண்களை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
நீலகிரி மாவட்டம் உதகை புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி, சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக உதகை சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் நீலகிரி மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கோவையில் பதிவான வழக்கில் சவுக்கு சங்கருக்கு அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனாலும் மற்ற வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் இன்னும் அவர் சிறையில் இருக்கிறார்.
இந்தச் சூழலில் உதகையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக இன்று (ஜூலை 29) காலை பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை காவல் துறையினர் கோவையில் இருந்து வாகனம் மூலம் உதகை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.சவுக்கு சங்கருக்காக அதிமுக வழக்கறிஞர்கள் தேவராஜ் பால நந்தகுமார் சிவகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர் தங்கராஜ் ஆஜரானார். நீதிபதி தமிழ் இனியன், சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார். இதற்கு, சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, சவுக்கு சங்கரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கோரினர். அப்போது, சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இருந்த போதும் சவுக்கு சங்கரை ஒருநாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, போலீஸார் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT