Published : 29 Jul 2024 02:48 PM
Last Updated : 29 Jul 2024 02:48 PM

தனியார் சிமென்ட் குவாரியில் வைக்கப்படும் வெடியால் புதூர் அருகே இடிந்து விழுந்த வீடுகள்!

தனியார் சிமென்ட் குவாரியில் வைக்கப்படும் வெடியால் புதூர் அருகே மேல வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் இடிந்து காணப்படும் வீடுகள்.

கோவில்பட்டி: புதூர் அருகே மேல வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் தனியார் சிமென்ட் குவாரியில் வைக்கப்படும் வெடி மருந்தால் வீடுகளில் விரிசல் விழுந்து இடிந்து வருகின்றன. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், புதூர் வட்டாரத்தில் பெரும்பாலும் மானாவாரி விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த 1974-ம்ஆண்டு காலகட்டத்தில் மேல வெங்கடேஸ்வரபுரம், சிவலார்பட்டி, சக்கனாபுரம், கம்பத்துப்பட்டி, முத்துச்சாமிபுரம், சென்னமரெட்டிபட்டி, மேல அருணாசலபுரம், சென்னம்பட்டி போன்றபல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை, தனியார் சிமென்ட் நிறுவனம் வாங்கியது.

1975-ம் ஆண்டு முதல் பூமிக்கடியில் பல நூறு அடி ஆழம் வரை பள்ளங்களைத் தோண்டி, சிமென்ட் தயாரிக்க பயன்படும் சுண்ணாம்புக் கல் எடுக்கப்படுகிறது. பாறைகளை பிளந்து கற்கள் எடுப்பதற்காக சக்தி வாய்ந்த வெடி வைக்கப்படுவதால் கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் விரிசல் விட்டு, குடியிருப்பதற்கு தகுதியற்ற நிலைக்கு மாறிவிட்டன. பல குடும்பங்கள் புலம் பெயர்ந்து நகரங்களுக்கு குடியேறி விட்டன.

இக்குவாரி வருகைக்கு பின் பல வீடுகள் விரிசல் விட்டு இடிந்து போய் விட்டன. இடிந்து போன வீடுகளுக்கு பதில், புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரக்கோரி பல முறை போராட்டம் மற்றும் மனுக்கள் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விவசாயம் செழித்த பூமி: இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: சென்னம்பட்டி ஊராட்சி மேல வெங்கடேஸ்வரபுரம் கிராமம் செல்வச்செழிப்பான விவசாயம் சார்ந்த கிராமம்ஆகும். இந்த கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 100-க்கும் மேற்பட்ட பழமையான சுண்ணாம்பு மற்றும்கடுக்காயன் கருப்பட்டி கலவையில்கட்டப்பட்ட வீடுகள் அக்கால வரலாற்றை நினைவுகூரும் விதமாக இருந்தன. இப்பகுதி நிலங்கள் சுண்ணாம்பு சத்துடைய சுத்த கரிசல் நிலங்கள் ஆகும். இந்நிலங் களில் அனைத்து வகை பயிர்களும் பயிரிடலாம்.

இந்நிலையில், சிமென்ட் நிறுவனத்தின் பிரதான குவாரி அமைந்திருக்கும் கிராமம் மேல வெங்கடேஸ்வரபுரம் ஆகும். சிமென்ட் குவாரிக்கு விவசாயிகளிடம் நிலம் வாங்கும் போது கிராமத்துக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் ஆண்டுதோறும் கிராம மக்களுடன் கலந்தாலோசித்து செய்து தருவதாக தெரிவித்தனர்.

புதூர் அருகே உள்ள தனியார் சிமென்ட் நிறுவன குவாரி.

நிதி கிடைக்குமா?: கிராமத்தில் இருந்து குறைந்தபட்சம் 500 மீட்டருக்கு அப்பால் குவாரி செயல்பட வேண்டும் என்ற விதி இருந்தும், கிராமத்தை ஒட்டி 50 மீட்டர் வரை நிலம்வாங்கி குவாரி செயல்படுகிறது. சுரங்கம்மற்றும் கனிம வளத்துறை விதிகளை மீறி இந்நிறுவனம் செயல்படுகிறது. தினமும் தோண்டி எடுக்கப்படும் கற்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.130 அரசின் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறைக்கு சிமென்ட் நிறுவனம் வரி செலுத்துகிறது.

இத்தொகை மூலம் பல நூறு கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. இத்தொகை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ள கனிம வள நிதியில் சேர்க்கப்படுகிறது. இந்நிதி குவாரி செயல்படும் கிராமத்தில் ஏற்படும் பாதிப்புகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்பட வேண்டும் என விதி உள்ளது. சுமார், 50 ஆண்டுகளில் இக்கிராமத்தின் வளர்ச்சி பணிகளுக்கு எதுவும் செய்யவில்லை. அரசும் இதுவரை எந்த வித உதவியும் செய்யவில்லை. குவாரி செயல்படும் பகுதியை யொட்டி இருந்த பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டது.

குடியிருக்க முடியாத நிலை: கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்த்து போராடுவதற்கு கிராம மக்களுக்கு வலு இல்லை. இதனால், தொடர்ந்து கிராமத்தில் குடியிருக்க முடியாத நிலைஏற்பட்டு விட்டது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வீடு கட்டித் தர வேண்டும். அக்கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை மாவட்ட கனிமவள நிதி மூலம் செய்து தர வேண்டும். கிராமத்துக்கு சமுதாயக் கூடம் கட்டித்தர வேண்டும்.

இக்கிராமத்தின் வளர்ச்சிப் பணிக்கு செய்ய வேண்டிய நிதியை, அரசு மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்துகிறது. எனவே, மாவட்ட கனிம வள நிதித்துறை தலைவராக உள்ள கனிமொழி எம்.பி., கிராமத்துக்கு நேரில் வருகை புரிந்து வாழ்வாதாரமின்றி தவிக்கும் கிராம மக்களின் சிரமங்களை கேட்டறிந்து குடியிருப்பதற்கு வீடு கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x