Published : 11 Aug 2014 09:24 AM
Last Updated : 11 Aug 2014 09:24 AM

வடபழனியில் மீட்கப்பட்ட குழந்தை தாயிடம் ஒப்படைப்பு: 24 மணி நேர பரபரப்பு முடிவுக்கு வந்தது

வடபழனி வணிக வளாகம் அருகே அனாதையாக விடப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை 24 மணி நேரத்துக்கு பிறகு தாயுடன் சேர்த்துவைக்கப்பட்டது.

சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் பிரபல வணிக வளாகம் ஒன்று உள்ளது. சனிக்கிழமை மாலையில் இந்த வளாகத்துக்கு வெளியே சுமார் ஒன்றரை வயதுள்ள ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த வடபழனி மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காமாட்சி குழந்தையை மீட்டு அருகே இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். ஆனால் குழந்தையைப் பற்றிய விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து குழந் தையை வடபழனி காவல் நிலையத்துக்கு காமாட்சி கொண்டுவந்தார். குழந்தையைத் தேடி யாரும் வராததைத் தொடர்ந்து இதுகுறித்த தகவல்கள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் கொடுக்கப் பட்டன. இரவு 11 மணியளவில் ஷெனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

வாட்ஸ் ஆபில் தகவல்

அந்த குழந்தையை உரியவ ரிடம் ஒப்படைக்க உதவி ஆய்வாளர் காமாட்சி `வாட்ஸ்ஆப்' மூலம் தனக்கு தெரிந்த பலருக்கு தகவல் அனுப்பியுள்ளார். அந்த தகவல் கிடைத்தவர்கள் மற்றவர்களுக்கு அனுப்பி குழந்தையின் பெற்றோரை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஞாயிறு இரவு 7 மணியளவில் குழந்தையின் தாய் வடபழனி காவல் நிலையம் வந்தார். விசாரணையில், அவர் தி.நகரைச் சேர்ந்த ஸ்ரீரேவதி என்பதும், குழந்தையின் பெயர் ஸ்ரீராம் என்பதும் தெரிந்தது. வடபழனி வணிக வளாகத்துக்கு ஷாப்பிங் வந்தவர் குழந்தையைத் தவற விட்டுள்ளார்.

தாயிடம் ஒப்படைப்பு

தான் குழந்தையைத் தேடிக்கொண்டிருந்ததாகவும், குழந்தை பற்றி பத்திரிகையில் வந்த தகவலை உறவினர் கூறியதால் வடபழனி காவல் நிலையத்துக்கு வந்ததாகவும் ரேவதி அழுதபடி கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அங் கிருந்த காவலர்கள் ரேவதியை காப்பகத்துக்கு அழைத்து சென்று ஸ்ரீராமை அவரிடம் ஒப்படைத்தனர்.

24 மணி நேரம் தாயை காணாமல் தவித்த குழந்தை, ரேவதியை பார்த்ததும் கையை தூக்கிக்கொண்டு அவரிடம் சென்றது. குழந்தையை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு ரேவதி அழுதது மற்றவர்களையும் கலங்க வைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x