Published : 29 Jul 2024 02:35 PM
Last Updated : 29 Jul 2024 02:35 PM

ஒரு வாரமாக இருளில் தவிக்கும் கேர்மாளம் மலை கிராம மக்கள் - பலத்த காற்றால் மின்சாரம் துண்டிப்பு

தாளவாடியை அடுத்த கேர்மாளம் ஊராட்சியில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து, தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. ராஜன் நகரில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மின்கம்பிகள் அமைத்து மின்சார விநியோகம் நடந்து வருகிறது.

கேர்மாளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் கடந்த 20-ம் தேதி மின்சாரம் தடைப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு 8 நாட்களாகி யுள்ளதால், வனப் பகுதியில் உள்ள கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், பூதாளபுரம் என 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மின் தடையால் ஊராட்சிக்கு சொந்தமான மோட்டாரை இயக்க முடியாததால், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

குடிநீர் விநியோகம்: இந்நிலையில், தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம், திங்களூர் மற்றும் கேர்மாளம் ஊராட்சிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு ஜெனரேட்டர் மூலமாக தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து கிராமங்களிலும் உள்ள கைப்பம்புகள் பராமரிக்கப்பட்டு பழுதுகள் நீக்கப்பட்டு, தற்போது குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கேர்மாளம் மலைக் கிராம மக்கள் கூறியதாவது: கேர்மாளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் வனப்பகுதியில் மின்கம்பங்கள் சாய்ந்தும், மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டும் உள்ளன. இதன் காரணமாக 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 8 நாட்களாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜோகனூரில் மின்கம்பத்தில் ஒயர்கள் அறுந்து தொங்கியபடி உள்ளன. பலத்த காற்றால் விழுந்த மின் கம்பங்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தவில்லை.

வன விலங்குகளால் அச்சம்: மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் தற்போது ஜெனரேட்டர் மூலம் சீராகியுள்ளது. ஆனால், மின் தடை தொடர்வதால், மாணவர்கள் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செல்போன்களுக்கு சார்ஜ் போடுவது போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு கூட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் விலங்குகள் வருவதை கண்காணிக்க முடியாததால், அச்சத்தில் வசித்து வருகிறோம், என்றனர்.

போக்குவரத்து பாதிப்பு: இதனிடையே, தமிழக - கர்நாடக எல்லையான கேர்மாளம் சோதனை சாவடி அருகே பலத்த சூறாவளி காற்று காரணமாக நேற்று அதிகாலை சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால், அவ்வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டபின் போக்குவரத்து சீரானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x