Published : 15 May 2018 07:45 AM
Last Updated : 15 May 2018 07:45 AM

சுங்கச்சாவடிகளில் அணிவகுத்து காத்து நிற்கும் வாகனங்கள்: பயணிகள் பெரும் சிரமம்; கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலைத்துறை

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், எரிபொருள் மற்றும் பயணிகள் நேரம் விரயமாகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 4,974 கிலோ மீட்டர் நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் 2,724 கி.மீ தூர சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மொத்தமுள்ள 44 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகள் தனியார் நிறுவனங்களாலும், 22 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அணிவகுக்கும் வாகனங்கள்

நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆனால், சுங்கச்சாவடி நிறுவனங்கள் சாலை பராமரிப்பு மற்றும் வாகன ஓட்டிகளுக்கான வசதியை போதிய அளவில் செய்து தருவதில்லை என புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சுங்கச்சாவடிகளில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக, பரனூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா, பாடியநல்லூர் போன்ற சுங்கச்சாவடிகளில் 30 முதல் 45 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

ரூ.60 ஆயிரம் கோடி இழப்பு

இது தொடர்பாக சமீபத்தில் கொல்கத்தா ஐஐஎம் மற்றும் இந்திய போக்குவரத்துக் கழகம் (டிரான்ஸ்போர்ட் காப்பரேஷன் ஆப் இந்தியா) இணைந்து நடத்திய ஆய்வில், ‘‘ஆண்டுதோறும் நாட்டில் 9.08 சதவீதம் அளவுக்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால், 4.01 சதவீதம் அளவுக்கே சாலை விரிவாக்க பணிகள் நடக்கின்றன. இதனால், முக்கிய நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பு, சரக்கு வாகனங்களில் சோதனை நடத்தும்போது தாமதம் ஏற்படுவதால் எரிபொருள் மற்றும் பயணிகளின் நேரமும் விரயமாகிறது. இதனால், நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.60 ஆயிரம் கோடி வரையில் இழப்பு ஏற்படுகிறது’’ என அதில் கூறப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தேங்கி நிற்பதற்கு தீர்வு காணும் வகையில் ‘மின்னணு கட்டண வசூல் முறை’ (FASTAG) கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதல் முறையாக சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் தொடங்கப்பட்டது. அடுத்தடுத்து, மற்ற சுங்கச்சாவடிகளிலும் அதிகளவில் விரைவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் கிடப்பில் இருப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.சுகுமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதை தடுக்கும் வகைய ில் மின்னணு கட்டண முறை (FASTAG) கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் மொத்தமுள்ள 18 சுங்கச்சாவடிகளில் மின்னணு கட்டண முறை வசதி இல்லை. மேலும், மின்னணு கட்டண முறை இருக்கும் சுங்கச்சாவடிகளிலும் செல்லும் வழிக்கு ஒன்றும், வரும் வழிக்கு ஒன்று என 2 தடத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது. ஆனால், பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் 6 அல்லது 7 பூத்கள் உள்ளன. எனவே, சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் தலா 3 அல்லது 4 தடத்தில் மின்னணு கட்டண முறையை விரைவாக கொண்டுவர வேண்டும்’’ என்றார்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

இது தொடர்பாக சென்னை ஐஐடி பேராசிரியர் கீத கிருஷ் ணன் கூறும்போது, ‘‘ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் தலா ஒரு பாதையில் மின்னணு கட்டண முறை வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய நெடுஞ்சாலை தொடங்கும்போதே, மின்னணு கட்டண முறை குறித்து வாகன ஓட்டிகளிடம் விரிவாக எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக, இந்த கட்டண முறை மூலம் சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டியதில்லை. நேரத்தை மிச்சப்படுத்த முடியும், எரிபொருள் செலவு குறையும் என மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வெளி நாடுகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தவோ, மெதுவாக செல்லவோ வேண்டிய அவசியமில்லை. 80 கி.மீ வேகத்தில் சென்றாலும், அங்குள்ள சுங்கச்சாவடிகளில் மின்னணு கட்டண முறையால் கட்டணத் தொகையை பிடித்தம் செய்து கொள்ளும் தொழில்நுட்ப வசதி உள்ளது. இதுபோன்ற தொழில்நுட்ப வசதியை இந்தியாவிலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x