Published : 29 Jul 2024 03:44 AM
Last Updated : 29 Jul 2024 03:44 AM

முதல்வர் உத்தரவை தொடர்ந்து டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து நேற்று திறக்கப்பட்ட தண்ணீர் 8 கண் மதகுகள் வழியாக காவிரியில் பாய்ந்தோடுகிறது.

சென்னை/ மேட்டூர்/ தருமபுரி: கர்நாடகாவில் இருந்து காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 110 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை 3 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அங்கு உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதை அடுத்துகாவிரியில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகம் இருப்பதால், கடந்த சில நாட்களாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர்அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 100 அடியை கடந்தது. நேற்று இது 110.76 அடியாக உயர்ந்தது. நேற்று மாலை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.51 லட்சம் கனஅடி, நீர் இருப்பு 79.49 டிஎம்சி என்ற அளவில் இருந்தது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன சாகுபடிக்கு நீர் திறப்பது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், நீர்வளத் துறைஅமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறை செயலர் மணிவாசன், நீர்வளம், வேளாண்துறை அதிகாரிகள், டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மேட்டூர் அணையில் இருந்து ஜூலை 28-ம் தேதி (நேற்று) மாலை 3 மணிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு, நீர்வரத்தை பொருத்து படிப்படியாக உயர்த்தப்பட உள்ளது. தற்போதுபயிரிடப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கும், ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் கொண்டாடுவதற்கும், ஏரிகள் மற்றும் குளங்களில் சேமிப்பதற்கும் ஏற்ப காவிரி நீர் திறந்துவிடப்பட உள்ளது.

இதையொட்டி கரையோர பகுதிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று மாலை 3 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். 8 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக நீர் திறப்பு உயர்த்தப்பட்டு இரவு 10 மணிக்கு 12 ஆயிரம்கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர்அணை நிரம்ப உள்ள நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு சுமார் 1.55 லட்சம் கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரை கொண்டு அருகில் உள்ள ஏரிகள் மற்றும் டெல்டா பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரப்பப்படும்” என்றார்.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 1.35 லட்சம் கனஅடியாக இருந்தது. நேற்று மாலை 1.58 லட்சம் கனஅடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகம் உள்ளதால் ஒகேனக்கல்லில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.கரையோரம் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

காவிரி கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காவிரி ஆற்றுப்படுகை மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடந்த 27, 28-ம்தேதிகளில் கடிதம் எழுதியுள்ளார். அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது குறித்து விளம்பரப்படுத்தி, மக்களை முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும். நிவாரண முகாம்களை தயார்நிலையில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் குளிப்பது, நீந்துவது, மீன்பிடிப்பது போன்றவற்றில் மக்கள் ஈடுபட கூடாது. ஆபத்தான இடங்களில் நின்று செல்ஃபி எடுக்க கூடாது.

நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு படையின் 365 வீரர்கள் உள்ளனர். தேவைப்படும் இடங்களுக்கு இவர்கள் உடனே அனுப்பப்படுவார்கள். மாநில அவசரகால மையம் (1070), மாவட்ட அவசரகால மையங்களை (1077) இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் புகார் கொடுக்கலாம் என்று வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x