Published : 29 Jul 2024 06:03 AM
Last Updated : 29 Jul 2024 06:03 AM

போலியாக பேராசிரியர் ‘கணக்கு’ காட்டிய கல்லூரிகள்: அண்ணா பல்கலை. ஆக்‌ஷன் - நடந்தது என்ன? | HTT Explainer

சென்னை: இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்த கல்லூரிகள் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்தி பேராசிரியர்கள் பலர் முறைகேடாக பல கல்லூரிகளில் பணியாற்றிய தகவல்கள் வெளியாகி சர்ச்சையானது. இந்த முறைகேட்டில் 800 பேர் வரை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களை அழைத்து விசாரிக்கவும் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், முறைகேட்டுடன் தொடர்புடைய அனைத்து கல்லூரிகளிடமும் விளக்கம் கேட்டு தற்போது அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தனியார் அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் பேராசிரியர்கள் போலியாக பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தனியார் அமைப்புக்கு நன்றி. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் தொடர்புடைய கல்லூரிகளிடமும் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுரப்பா தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில், “நான் பணியில் இருந்த காலத்திலேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றன. அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அளவும் குறைக்கப்பட்டது. இதுசார்ந்த வழக்கில் உயர் நீதிமன்றமும் பல்கலைக்கழக உத்தரவை உறுதி செய்தது’ என்று கூறியுள்ளார்.

அடுத்தகட்டமாக பேராசிரியர்கள், கல்லூரிகள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை விசாரணை குழு ஒரு வாரத்தில் பரிந்துரைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

முறைகேடு நடந்தது எப்படி? - முன்னதாக, தமிழகத்தில் 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்ட தகவல்கள்:

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 480 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த கல்வி ஆண்டில் (2023-2024) அக்கல்லூரிகளில் 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணிபுரிவது போன்று போலியாக கணக்கு காட்டப்பட்டிருப்பது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 175 பேர் பிஎச்.டி பட்டம் பெற்றவர்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் என்ற பகுதியில் ஒவ்வொரு கல்லூரியிலும் பணிபுரியும் பேராசிரியர்களின் விவரங்களைக் காணலாம்.

13 கல்லூரிகள்: ஒரு பேராசிரியர் 13 கல்லூரிகளில் பணியில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த முறைகேட்டால் மாணவர்களுக்கு தரமான பொறியியல் கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியில் உண்மையில் பணியாற்றுகிறாரா அல்லது ஆய்வு நேரத்தில் வேறு கல்லூரியில் இருந்து பேராசிரியர் கொண்டுவரப்பட்டுள்ளாரா என்பதை ஊதிய விவரம், இபிஎப் தகவல், அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அடையாள எண் ஆகியவற்றைக் கொண்டு எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

இந்த முறைகேடு தொடர்பான விவரங்களை அனைத்து ஆதாரங்களுடன் மத்திய கல்வி அமைச்சர், ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழகம், தமிழக ஆளுநர், முதல்வர், உயர் கல்வித் துறை அமைச்சர் அனைவருக்கும் அனுப்பியுள்ளோம். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நினைத்தால் இந்த முறைகேட்டை ஒரே வாரத்தில் உறுதிப்படுத்தி சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழுநேர பேராசிரியராகப் பணியாற்ற முடியாது. கவுரவப் பேராசிரியராக இருந்தால்கூட 2 கல்லூரிகளில் மட்டுமே பணிபுரிய முடியும். எனவே, முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த 353 பேராசிரியர்களையும் விசாரித்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் தெரிவித்தது.

ஆளுநர் உத்தரவு: தமிழக ஆளுநரும், அண்ணா பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்தில் நடந்துள்ள விதிமுறைகள் குறித்து உரிய விளக்கங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு துணைவேந்தர் ஆர்.வேல்ராஜுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதன் தொடர்ச்சியாக, அண்ணா பல்லைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறும்போது, “அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 52,500 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2 ஆயிரம் பேராசிரியர்கள் பற்றாக்குறை இருந்ததால் 189 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதாக கல்லூரி நிர்வாகத்தினர் கணக்கு காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகளின் பேராசிரியர்கள் விவரங்களை ஆய்வு செய்தோம். அப்போது 189 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் வெவ்வேறு ஆதார் எண்களை கொடுத்துள்ளனர். அவர்களின் பிறந்த தேதி மற்றும் இன்னொரு தொழில்நுட்ப முறை வாயிலாக அவர்களை அடையாளம் கண்டோம்.

இது குறித்து விசாரிப்பதற்காக குழு அமைத்துள்ளோம். முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தினர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த பேராசிரியர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்தப் பின்னணியில்தான் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்த கல்லூரிகள் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x