Last Updated : 28 Jul, 2024 03:41 PM

 

Published : 28 Jul 2024 03:41 PM
Last Updated : 28 Jul 2024 03:41 PM

புதுச்சேரி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 280 கோடி ஒதுக்கியுள்ளது: ரயில்வே இணை அமைச்சர் தகவல்

புதுச்சேரி: மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்படவில்லை என்றும், பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 280 கோடி ஒதுக்கியுள்ளது என்றும் ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ''மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்படவில்லை. பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு புதுச்சேரிக்கு பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 280 கோடி ஒதுக்கியுள்ளது.

ஏற்கெனவே ரயில்வே திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.93 கோடி செலவில் புதுச்சேரி ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணியை ரயில்வே தொடங்கியுள்ளது. காரைக்கால் மற்றும் மாஹே பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களிலும் இதேபோன்ற மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். காரைக்கால் - பேரளம் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் 100 சதவீதம் மின்மயமாக்கல் பணிகளை மேற்கொண்டுள்ளோம். புதுச்சேரியை இணைக்கும் புதிய ரயில்கள் பரிசீலனையில் உள்ளன. மோடியை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. புதுச்சேரிக்கு வேளாண்துறை, சுற்றுலா, கல்வி என பல துறைகளில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாத்துறைக்கு ரூ.148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 100% இலக்கை எட்டியுள்ளது. புதுச்சேரிக்கு வந்தேபாரத் ரயில் வருமா என கேட்கிறீர்கள். வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பற்றாக்குறையாகவுள்ளன. அதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரிக்கு தேவையான திட்டங்கள் குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களில் மீண்டும் புதுச்சேரிக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கி ஆய்வு செய்வேன்.

புதிய ரயில் சேவைகள் புதுச்சேரியில் இருந்து தொடங்க ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகத்துக்கு கிடைக்கும் திட்டங்கள் போன்றே புதுச்சேரிக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக, புதுச்சேரி - வில்லியனூர்- திண்டிவனம் ரயில்பாதை ஒரு சாத்தியமான திட்டம். ரூ. 740 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

ஏஎப்டி மில் அருகே புதுச்சேரி- கடலூர் சாலையில் ரூ.75 கோடியில் நான்கு வழி ரயில்வே மேம்பாலம் அமைக்க ஆகஸ்ட் 24ல் டெண்டர் விடப்படும். புதுச்சேரி - கடலூர் ரயில்பாதை அமைப்பதற்கான சர்வே பணிகள் நடைபெற்று வருகின்றன. முழு திட்ட அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது'' என்று குறிப்பிட்டார். பேட்டியின் போது அமைச்சர் நமச்சிவாயம், எம்.பி செல்வகணபதி, மேலிட பொருப்பாளர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x