Published : 28 Jul 2024 03:15 PM
Last Updated : 28 Jul 2024 03:15 PM
மதுரை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடமை தவறிவிட்டார் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மண்டல ஆலோசனைக் கூட்டம் மதுரையில் இன்று (ஜூலை 28) நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 50 பேரவைத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். இந்த கூட்டங்களில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி, எதிர்கால திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
நிதி ஆயோக் கூட்டம் மிக முக்கியமான கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காமல் கடமை தவறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பேசாமல், நிதி ஆயோக் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று தமிழகத்தின் கோரிக்கையை தெரிவித்திருக்க வேண்டும். தமிழர்களின் நலன் சார்ந்த உரிமைக்காக நிதி ஆயோக் கூட்டத்திற்கு நேரில் செல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டு சும்மா இருக்கலாமா? அரசியல் காரணத்துக்காக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நொண்டி சாக்கு கூறி நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து உள்ளார். தற்போது பிஹார் மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, அடுத்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மற்றாந்தாய் மனபான்மை இல்லாமல் தமிழகத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.'' இவ்வாறு வாசன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT