Last Updated : 28 Jul, 2024 02:46 PM

 

Published : 28 Jul 2024 02:46 PM
Last Updated : 28 Jul 2024 02:46 PM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது - நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு

கைதானவர்கள்

சென்னை: அரிவாள் வெட்டில் ஆம்ஸ்ட்ராங் தப்பினால், நாட்டு வெடிகுண்டுகளை வீசி நிலைகுலைய செய்ய கொலை கும்பல் முடிவு செய்திருந்தது. இந்த நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்த வழக்கில் இன்று 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதோடு சேர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 16 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிக்கியதால் வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. கொலைக்காக ரூ.1 கோடி வரை பணம் கைமாறிய விவகாரமும் வெளியானது. கொலையாளிகள், பணத்தை கைமாற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் திரை மறைவில் இருந்து மூளையாக செயல்பட்டு, திட்டமிட்டு, பணம் மற்றும் சட்ட உதவி செய்தவர்கள் யார்? என்ற கேள்விக்கு மட்டும் துல்லியமான விடை இதுவரை கிடைக்கவில்லை.

இந்த உண்மைகளை கண்டறியும் வகையில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய 3 பேரையும் 2-வது முறையாக 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். கொலை நடைபெற்ற பெரம்பூர், புழல் மற்றும் கொலை திட்டம் வகுக்கப்பட்ட இடம் உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீஸார் குழுவாகவும், தனித்தனியாகவும் விசாரித்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உளவாளி பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப் (28) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விஜய்குமார் (21), முகிலன் (32), விக்னேஷ் என்ற அப்பு (27) ஆகிய மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆம்ஸ்ட்ராங்கை கொலை கும்பல் வெட்டி சாய்க்கும்போது அவர் தப்பினால், நாட்டு வெடிகுண்டுகளை வீசி நிலை குலைய செய்ய கொலை கும்பல் ஆயுதங்களுடன் நாட்டு வெடிகுண்டுகளையும் கூடவே கொண்டு சென்றிருந்தனர்.

அரிவாள் வெட்டில் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்ததால் கொலை கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தாமல் தப்பி ஓடியது. பின்னர், அவைகளை வேறு இடங்களில் பதுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கைது செய்யப்பட்ட 3 பேரோடு சேர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x