Published : 28 Jul 2024 12:43 PM
Last Updated : 28 Jul 2024 12:43 PM
சென்னை: காவிரியிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன் விவசாயிகளுக்குத் தேவையான விதை நெல், உரம் போன்ற இடுபொருட்கள் மற்றும் வங்கிக்கடன் வழங்க திமுக அரசு ஏற்பாடு செய்திட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, கர்நாடக காங்கிரஸ் அரசு மற்றும் மத்திய அரசுடன் ரகசியமாக கைகோர்த்து காவிரியில் நமக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கு நீரை முறையே வலியுறுத்திப் பெறாமல், டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே இழைத்து வருகிறது. இதனால், டெல்டா பாசன விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தை அடைந்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரியில் போதிய தண்ணீர் திறந்துவிடப்படாததால், குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் போதிய தண்ணீர் இல்லாமல், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பெரிதும் நஷ்டமடைந்தனர். குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யப்படாததால், விவசாயிகள் உரிய நிவாரணமும் பெற இயலவில்லை. சம்பா தாளடி காலங்களில் ஒருபுறம் நீரின்றி பயிர் கருகியது, மறுபுறம் மழை வெள்ளத்தால் பாதிப்பும் ஏற்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை காலத்தே திறக்காததால், அறுவடை செய்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, முளைத்து பாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்தன
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவராணத்தை திமுக அரசு முழுமையாக வழங்கவில்லை. நடப்பாண்டில் 2024-2025, கூட்டாளியான கர்நாடக காங்கிரஸ் அரசிடம் காவிரியில் போதியத் தண்ணீரை பெறாததாலும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாததாலும், மும்முனை மின்சாரம் வழங்கப்படாததாலும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
கடந்த ஒரு வார காலமாக இயற்கையின் கருணையால் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால், கர்நாடக அரசு வேறு வழியின்றி உபரி நீரை காவிரியில் திறந்து விடுகிறது. அதன் காரணமாக மேட்டூர் ஆணை வெகு வேகமாக நிரம்பி வருகிறது. 27.7.2024 அன்று 100 அடியை தாண்டியுள்ளது. எனவே, சம்பா சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்துகிறேன்.
சம்பா சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால விதை நெல் ரகங்கள் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தரப்பில் இருந்து தெரிய வருகிறது. எனவே, உடனடியாக இருவகை விதை நெல்களையும் தட்டுப்பாடின்றி வேண்டிய அளவு வழங்க வலியுறுத்துகிறேன். மேலும், திமுக அரசு சம்பா பாசனத்திற்கு தன்னுடைய கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய இடுபொருட்களையும் விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்துகிறேன்.
கடந்த ஆண்டு குறுவை சாகுபடி பொய்த்து விட்டதால், பயிர் கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளுக்கு பயிர் கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்தியிருந்தேன். சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு நடப்பு பருவத்திற்கு பயிர் கடன் வழங்கப்படமாட்டாது என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் உள்ளனர். எனவே, இவ்வாண்டு சம்பா சாகுபடிக்கு, சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு, எந்த நிபந்தனையுமின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குளம், குட்டை மற்றும் கடைமடை பகுதிகள் வரை செல்ல ஏதுவாக வாய்க்கால்கள், மதகுகளை பழுது நீக்கி சரி செய்யவும், கரைகளை பலப்படுத்தவும் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT