Published : 28 Jul 2024 09:17 AM
Last Updated : 28 Jul 2024 09:17 AM
சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் தொழில் குழுமத்தின் ரூ.298 கோடி அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் தொழில் குழுமத்தின் கீழ் சிமென்ட், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி, இறக்குமதி, மின் உற்பத்தி என நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் அக்குழும நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
இந்த சோதனையில் கோடிக் கணக்கில் பணம், தங்கம், வெள்ளி நகைகள், சொத்துகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கின. இதையடுத்து, அமலாக்கத் துறை கடந்த ஆண்டு அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அதில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அக்குழுமத்தின் ரூ.360 கோடி வங்கி வைப்பு தொகையை அமலாக்கத்துறை முடக்கியது.
மேலும், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கையாளுவதில் ரூ.900 கோடி ஊழல் நடந்திருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், அக்குழுமத்துக்கு சொந்தமான ரூ.298 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT