Published : 28 Jul 2024 04:37 AM
Last Updated : 28 Jul 2024 04:37 AM

‘நிதி ஆயோக்’ கூட்டத்தை தமிழகம் புறக்கணித்தது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘மத்திய பாஜக அரசு, அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துவதால், ‘நிதி ஆயோக்’ கூட்டத்தை புறக்கணித்து மக்கள் மன்றத்தில் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் நேற்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான், மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.

மத்திய பாஜக அரசு, தொடர்ச்சியாக தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. தமிழகத்துக்கு அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத்திட்டம் என்றால், அது, மதுரைஎய்ம்ஸ் மருத்துவமனைதான். ஆனால் அதுவும் பத்தாண்டுகள்ஆகியும் என்ன நிலைமையில் இருக்கிறதென உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

3-வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், இந்திய மக்கள் அந்த கட்சிக்கு பெரும்பான்மை அளிக்கவில்லை. ஒருசில மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லையென்றால், பாஜகவால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில், தங்களின் சறுக்கலுக்கு என்ன காரணம் என்று உணர்ந்து, பாஜக திருந்தியிருக்கும் என நினைத்தேன். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2-ம் கட்டப் பணிகளுக்காக மத்திய அரசு, தன்னுடைய பங்காக ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல், வேண்டுமென்றே 3 ஆண்டுகளாக காலம் தாழ்த்திக் கொண்டு இருக்கிறது. கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பதைப் பற்றி மூச்சே விடவில்லை. கடந்த ஆண்டு 2 முறை புயல்கள் தாக்கி, கடும் இயற்கைப் பேரிடர்களை தமிழகம் சந்தித்தது. இதற்கு நிவாரணமாக, ரூ.37 ஆயிரம் கோடி கேட்டோம்.

ஆனால், ஆண்டுதோறும் வழக்கமாக வழங்கப்பட வேண்டிய ரூ.276 கோடி நிதியை அளித்துவிட்டு, ஏமாற்றி விட்டார்கள். பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகு மென காத்திருந்தோம். ஆனால், தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையை முடக்கும் வகையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ திட்டத்தின்கீழ், வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளார்கள்.

ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை சரிக்கட்டுவதற்கான ரூ.20 ஆயிரம் கோடி இழப்பீட்டையே இன்னும் அளிக்காத இந்த மத்திய அரசு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? கடந்த பத்தாண்டுகளாக வரு மான வரிச்சலுகை இன்றி தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, வெறும் ரூ.17,500 சலுகையை மட்டும் வழங்கி, அந்த சலுகையும் பெரும்பான்மையோருக்கு கிடைக்காமல் செய்துகொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த மத்திய அரசு.

இது தமிழகத்தை பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட். சுயநலத்துக்காக, நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள போட்டுக்கொண்ட பட்ஜெட் இது. மத்திய அரசுக்குத் தமிழக மக்களின் குரலாக, ஏன், இந்திய நாட்டு மக்களின் குரலாக ஒன்றை சொல்கிறேன். மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள். மேலும் மேலும் தோல்விகளைச் சந்திப்பீர் கள். மத்திய அரசுக்கு தமிழக மக்களின் குரலாக, ஏன், இந்திய நாட்டு மக்களின் குரலாக ஒன்று சொல்கிறேன். மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள். மேலும் மேலும் தோல்விகளை சந்திப்பீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x