Published : 28 Jul 2024 10:57 AM
Last Updated : 28 Jul 2024 10:57 AM

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் பெறும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு: ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள்மூலம் மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

பொது மக்களுக்கான அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் முதல்வர் ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் முதல்வரின் முகவரித் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளில் 2,341 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, தற்போது வரை 861 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 15 துறைகள் சார்ந்த கோரிக்கைகள் சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று தலைமை செயலகத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுகூட்டம் நடத்தினார். அப்போது காணொலி மூலமாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி, முகாம் ஏற்பாடுகள் குறித்தும், பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்தும் பயனாளிகளிடமும் கேட்டறிந்தார். தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வளர்ச்சி ஆணையர் நா.முருகானந்தம், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் பெ.அமுதா உள்ளிட்டோர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.

‘மக்களுடன் முதல்வர்’ திட்ட செயல்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், “பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்செய்து தரப்பட்டுள்ளன. முகாம்ஒன்றுக்கு சராசரியாக 900 மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. 77 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, 19 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன” என்றார்.

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் ப.ஆகாஷ், “19 கவுன்ட்டர்கள் கணிணி வசதியுடன் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை, 7,400-க்கும்மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 400 முதல் 450 மனுக்கள் பெறப்படுகின்றன. இதில் வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், மருத்துவ காப்பீட்டு அட்டை போன்றவற்றை கோரி அதிகமாக மனுக்கள் வருகின்றன” என்றார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா, “முகாம்கள் காலை 9 மணிக்கு தொடங்கப்படுகிறது. 73 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, 15 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு, 6,700 மனுக்கள் பெறப்பட்டுள்ளன” என்றார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, “49 முகாம்கள்நடத்த உத்தேசிக்கப்பட்டு, 27 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு, 21,654 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 800 முதல் 900 மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முதியோர் உதவித்தொகை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், பட்டா மாறுதல், போன்றவற்றை கோரி அதிகமாக மனுக்கள் வருகின்றன” என்றார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.லட்சுமிபதி, “72முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, 32 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு, 26,468 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 800 மனுக்கள் பெறப்படுகிறன. இலவச வீட்டுமனைப் பட்டா, மனை உட்பிரிவு பெயர் மாற்றம், சாதி சான்றிதழ், வருவாய்சான்றிதழ் கோரியும், மின்சார இணைப்பு பெயர் மாற்றம் போன்றவற்றை கோரியும் அதிகமாக மனுக்கள் வருகின்றன” என்றார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியிடம், மதுரை மாவட்ட முகாம்களில் மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் முகாம் குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்ட விவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அதற்கு அமைச்சர் பி.மூர்த்தி, “இத்திட்டம் குறித்து கிராமம் கிராமமாக சென்று ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமாக விளம்பரம் செய்யப்பட்டது. முகாம் நடைபெறும் விவரம் குறித்து சுவரெட்டிகள் மூலமாகவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

திட்ட முகாம்களுக்கு வந்தபொதுமக்களிடமும் முதல்வர்மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். இறுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கு, ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம், மக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு கண்டு, உரிய பயன்கள் பயனாளிகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x