Published : 29 Aug 2014 10:05 AM
Last Updated : 29 Aug 2014 10:05 AM
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இதனருகே உள்ள விநாயகர் கோயில் நிலத்தை அபகரித்ததாக மு.க.அழகிரி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அதன்பின்னரும் எந்தெந்த பிரிவுகளில் வழக்கு, புகார்தாரர் யார் என்பது குறித்த விவரத்தை செய்தியாளர்களிடம் தெரிவிக்க மறுத்து போலீஸ் அதிகாரிகள் ரகசியம் காத்து வந்தனர்.
இந்நிலையில் அழகிரி மீதான வழக்கு குறித்த முழு விவரமும் தற்போது வெளியாகி உள்ளது. இந்த புகாரை அளித்தவர் சிவரக்கோட்டை விநாயகர் கோயில் நிர்வாக அதிகாரியும், தக்காருமான ஆர்.ஜெயராமன் (39) எனத் தெரியவந்துள்ளது. இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நஞ்சை நிலம் உள்ளது. இதற்கு 4.8.1969-ல் மதுரை செட்டில்மென்ட் தாசில்தாரால் ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டுள்ளது. மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளைக்காக இந்த நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் கூட்டாக சதி செய்து 30.6.2008-ல் இந்த கோயிலின் பூசாரிகளான ராமசாமி, வேலுச்சாமி ஆகியோர் அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி கவுண்டர் மனைவி ஆதிலெட்சுமிக்கு (50) பரிவர்த்தனை பத்திரம் (6199/2008) எழுதி திருமங்கலம் சப்-ரிஜிஸ்தரார் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
அழகிரி பெயரில் மாற்றம்
ஆதிலெட்சுமி அதே தேதியில் மதுரை எஸ்.பி.ஓ.ஏ. காலனியைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவருக்கு இந்த நிலத்தை மோசடியாக கிரயப்பத்திரம் (6200/2008) எழுதிக் கொடுத்துள்ளார். அந்த சம்பத்குமார் 10.1.2011-ல் மு.க.அழகிரிக்கு கிரய ஆவணம் மூலம் பத்திரம் (1121/2011) எழுதிக்கொடுத்துள்ளார். இதற்கு உடந்தையாக பொன்னகரத்தைச் சேர்ந்த செல்லையா மகன் சேதுராமன், கீரைத்துறையைச் சேர்ந்த குருசாமி மகன் சதீஷ்குமார் ஆகியோர் சாட்சிக் கையெழுத்து போட்டுள்ளனர். மேலும் அந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்பதை மறைக்க அதன் பட்டா எண்ணான 1597 என்பதற்குப் பதில் 1270 என போலியாக கிரயப்பத்திரத்தில் காண்பித்துள்ளனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
4 பிரிவுகளில் வழக்கு
இதன்படி மு.க.அழகிரி, சம்பத்குமார், ஆதிலெட்சுமி, சாட்சி கையெழுத்திட்ட சேதுராமன், சதீஷ்குமார், கோயில் பூசாரிகளான ராமசாமி, வேலுச்சாமி ஆகிய 7 பேர் மீது 120-பி (கூட்டு சதி), 468 (போலி ஆவணங்கள் தயாரித்தல்), 471 (போலி ஆவணத்தை உண்மையாக்க முயற்சி), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ. விமலா மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் பூசாரிகளான ராமசாமி, வேலுச்சாமி ஆகிய 2 பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டனர். எனவே மு.க.அழகிரி உள்பட மற்ற 5 பேரையும் கைது செய்வது தொடர்பாக ‘மேலிடத்தில்’இருந்து உத்தரவு கிடைக்கப் பெறாததால் குற்றப்பிரிவு போலீஸாரிடம் குழப்பம் நிலவி வருகிறது.
மு.க.அழகிரிக்கு இடைக்கால முன்ஜாமீன்
கோயில் நிலத்தை அபகரித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி அழகிரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்த நிலம் தொடர்பாக இந்து அறநிலையத் துறைக்கும் எங்களுக்கும் திருமங்கலம் மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், இவ்வழக்கில் மு.க.அழகிரியை செப். 3 வரை கைது செய்யக்கூடாது என இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT