Published : 27 Jul 2024 05:09 PM
Last Updated : 27 Jul 2024 05:09 PM

“சாதி, மத அடிப்படையில் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறது திமுக” - மத்திய அமைச்சர் சாடல்

சென்னை: சாதி, மதம், பிரதேசம் அடிப்படையில் திமுக மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பாஜகவின் சிந்தனையாளர்கள் பிரிவு சார்பில் 2024-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் குறித்த நிகழ்ச்சியில் மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். அப்போது அவர், "மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம் நடத்தி இருக்கிறது. உண்மையில், திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டதை விட பல மடங்கு அதிக நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்க திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை. ஆழ்கடல் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை தமிழ்நாடு அரசு பயன்படுத்த வேண்டும்.

2047-ல் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மனதில் வைத்து ஒட்டுமொத்த பட்ஜெட்டும் மிகச் சிறப்பாக உள்ளது. ஸ்டார்ட்அப்கள், வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏஞ்சல் வரி நீக்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறை இப்போது பொது மற்றும் தனியார் கூட்டாண்மைக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த பத்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு வளர்ச்சியடையும்.

பட்ஜெட்டில் தமிழகத்துக்கு உரிய பங்கு கிடைத்து வருகிறது. ஆனால், மாநில அரசு பொறுப்பற்ற முறையில் உள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசால் பயன்படுத்த முடியவில்லை. பரந்த கடற்கரை மற்றும் சிறந்த கடல் வளங்களைக் கொண்ட தமிழகத்தில், ஆழ்கடல் இயக்கத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை.

தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு பாஜக ஆட்சியில் ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாம் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது ரயில்வே துறைக்கு வெறும் ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தற்போது பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துள்ள நிலையில் நீங்கள் ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள்? தமிழகம் 6 வந்தே பாரத் விரைவு ரயில்களைப் பெற்றுள்ளது. மேலும், மாநிலத்தில் 77 ரயில் நிலையங்கள் அமிர்த் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தமிழகம், தமிழக மக்கள் மக்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் மீது பிரதமர் மோடிக்கு பற்று இருப்பதை இத்தனை திட்டங்களும் உணர்த்துகின்றன. மக்களிடையே பிரதேசம், மதம், சாதிய அடிப்படையில் திமுக பிளவுகளை உருவாக்கி வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பட்ஜெட்டில் இடமளிக்கப்பட்டிருப்பதை காங்கிரஸால் கூட விமர்சிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x