Published : 27 Jul 2024 01:12 PM
Last Updated : 27 Jul 2024 01:12 PM

“இந்தி பேசாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சனை” - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

திமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உரையாற்றினர். 

சென்னை: “மத்திய பட்ஜெட்டில், இந்தி பேசாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சித்துள்ளது,” என்று திமுக சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து திமுகவின் சென்னை கிழக்கு, வடக்கு, வடகிழக்கு மாவட்டங்கள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (ஜூலை 27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பங்கேற்றுப் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் முதல் கட்ட பிரச்சாரத்தில் பங்கேற்றபோது, நான் தமிழனாக பிறக்கவில்லையே என்று வருந்துவதாக தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு இறுதிக் கட்ட தேர்தல் ஒடிசா மாநிலத்தில் நடக்கும் போது, அங்கு நடைபெற்ற பிரச்சாரத்தில் பங்கேற்ற மோடி, ஒடிசா மாநிலத்தை தமிழன் ஆளலாமா? என்று விமர்சித்து இருந்தார். அவர் ஓட்டுக்காக எப்படி வேண்டுமானாலும் பேசக் கூடியவர்.

மத்திய பட்ஜெட்டில் நிதிஷ் குமார் முதல்வராக இருக்கும் பிஹார் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார். ஏனென்றால் அது இந்தி பேசும் மாநிலம். குஜராத் மாநிலத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது அம்மாநிலம் கேட்காமலேயே அடுத்த நாளே வெள்ள நிவாரண நிதியாக ரூ.1,000 கோடி ஒதுக்கினார். தமிழகத்தில் சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் பெரு வெள்ளம் ஏற்பட்டதற்கு ரூ.34,000 கோடி இழப்பீடு கேட்டபோது, வெறும் ரூ.257 கோடியை தான் மோடி கொடுத்தார்.

இந்தி பேசாத ஆந்திர மாநிலத்துக்கு பட்ஜெட்டில் ரூ.16 ஆயிரம் கோடி கடன் வாங்க மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும் என உறுதி அளித்துள்ளார். அதாவது அவர்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம். கடனையும், வட்டியையும் அம்மாநிலமே செலுத்த வேண்டும். இந்தி பேசும் மாநிலத்துக்கு வாரி வழங்கும் மோடி, இந்தி பேசாத மாநிலத்தை பழி வாங்குகிறார். இதனால் சந்திரபாபு நாயுடு தனது ஆதரவை திரும்பப்பெறும் சூழல் விரைவில் ஏற்படும். அதனால் மத்திய ஆட்சி நிலைக்காது.

தமிழர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை, தமிழும் இல்லை, தமிழகத்துக்கு நிதியும் இல்லை. தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்ததை தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள். தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று அவர் பேசினார்.தொடர்ந்து திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திமுக தொண்டர்கள் வந்து குவிந்த நிலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள ராஜாஜி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்பி-க்கள் கலாநிதி வீராசாமி, வில்சன், எம்எல்ஏ-க்கள் மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர் தாயகம் கவி, கே.பி.சங்கர், இ.பரந்தாமன், ஐட்ரீம்ஸ் மூர்த்தி ஜே.ஜே.எபினேசர், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x