Published : 27 Jul 2024 06:45 AM
Last Updated : 27 Jul 2024 06:45 AM
ராமேசுவரம்: இலங்கையில் செப். 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று,அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் ஆக. 15-ம் தேதி தொடங்குகிறது.
இலங்கையில் அதிபர் ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. மக்கள்நேரடியாக அதிபரைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதிபரே அரசின் தலைவராகவும், முப்படைகளின் தலைவராகவும் இருக்கிறார்.
சுதந்திரமடைந்த பின்னர் பிரதமர் தலைமையிலான ஆட்சி முறை இருந்த இலங்கையில், முதல்முறையாக அதிபர் ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டு, 1982-ல் நடந்த தேர்தலில் கே.ஆர்.ஜெயவர்தன வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1988-ல் ரணசிங்க பிரேமதாச, 1994, 1999-ல் சந்திரிகா குமாரதுங்க, 2005, 2010-ல் மகிந்த ராஜபக்ச, 2015-ல் மைத்ரிபால சிறிசேனா ஆகியோர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2019 நவம்பரில் நடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச, 52 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். 2022 ஜூலை22-ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் இடைக்காலஅதிபராக ரணில் விக்ரமசிங்கதேர்வு செய்யப்பட்டார்.
அதிபர் ரணில் விக்ரம சிங்கேவின் பதவிக்காலம் வரும் நவம்பரில் நிறைவடைகிறது. இந்நிலையில், செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் என இலங்கை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. ஆகஸ்ட் 15 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது.
அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT