Published : 27 Jul 2024 04:40 AM
Last Updated : 27 Jul 2024 04:40 AM
சென்னை/தஞ்சாவூர்: மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரியில் அதிகஅளவில் தண்ணீர் வருவதால் விரைவில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும்.இதைக் கருத்தில் கொண்டும், அணை முழுவதுமாக நிரம்பிய பின்னர் ஒட்டுமொத்த நீரையும் கொள்ளிடத்தில் திறந்துவிட்டு,வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையிலும் முன்கூட்டியே அணையிலிருந்து விநாடிக்கு 25ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரைத் திறக்க வேண்டும்.
இதனால் பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி, நிலத்தடிநீர்மட்டம் உயரும். எனவே, மேட்டூர்அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மேட்டூர் அணை நிரம்பும்வரை காத்திருக்க கூடாது. உபரி நீரை கடலில் கலக்கவிடாமல், திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டும். அணையில் இருந்துகாவிரியிலும், கிளை வாய்க்கால்களிலும் உடனடியாக தண்ணீரை திறந்துவிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
வல்லுநர் குழு யோசனை: தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு வந்த மூத்த வேளாண் வல்லுநர் குழுவைச் சேர்ந்த வி.பழனியப்பன், பி.கலைவாணன் ஆகியோர் பேசியதாவது:
தற்போது மேட்டூர்அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் கொள்ளளவுக்கு நிகராக, டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 4,303 ஏரி, குளங்களில் தண்ணீரை நிரப்பி வைக்கலாம். மேலும், தரிசு வயல்களிலும் தண்ணீரை நிறுத்திவைக்கலாம். இதனால் சாகுபடி செய்யும்போது, பயிருக்கு நுண்ணுயிர் சத்துகள் அதிக அளவு கிடைக்கும்.
டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்வது வழக்கம். இதற்கு 185 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இந்த தேவையை பூர்த்தி செய்ய தற்போது மேட்டூர் அணை நிரம்புவதுபோல, மீண்டும் ஒருமுறை நிரம்ப வேண்டும்.
சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் மாதத்தில் முன்னேற்பாடுகளைத் தொடங்கினாலும், ஆக.15-ம் தேதிக்கு பின்னரே விதைகளை விதைக்க வேண்டும். முன்கூட்டியே விதைத்தால், பூக்கும் தருணமான அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை பொழிந்து, பயிர்கள் வீணாகி,மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
அதேபோல, விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையைப் பின்பற்றினால், நடவு வரை ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வரை மீதப்படுத்தலாம். அதே நேரத்தில் கூடுதலாக மகசூல் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு மூத்த வேளாண் வல்லுநர்கள் பேசினர்.
ஆடிப்பெருக்கை கொண்டாட 5,000 கனஅடி நீர் திறப்பு: ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “காவிரிப் பாசனம் பெறும் சேலம், ஈரோடு, கரூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 28-ம் தேதி முதல் ஆக. 3-ம் தேதி வரை 7 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT