Published : 27 Jul 2024 04:15 AM
Last Updated : 27 Jul 2024 04:15 AM
சென்னை: தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பொது மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே-வில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தமிழகத்தை சேர்ந்த நபர்தான் காரணம் என ஷோபா கரந்தலஜே பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இருபிரிவினரிடையே கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் ஷோபா கரந்தலஜே மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. வேறு இரு நிகழ்வுகளை சுட்டிக்காட்டியே இந்த கருத்தை மனுதாரர் தெரிவித்திருந்தார், பெங்களூருவிலும் இது சம்பந்தமாக பதியப்பட்ட வழக்குக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மனுதாரர் தமிழர்கள் குறித்த தனது கருத்துக்காக எக்ஸ் வலைதளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார் என வாதிடப்பட்டது, அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மன்னிப்பு கோரும் விவகாரம் தொடர்பாக அரசின் கருத்தைஅறிந்து தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்றார்.
அதையடுத்து இதுபோன்ற வழக்கில் பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிபந்தனை ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அதேபோல செந்தியாளர் சந்திப்பை நடத்தி அதில் பொது மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா என்பது குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டுமென அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 31-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT