Published : 27 Jul 2024 06:04 AM
Last Updated : 27 Jul 2024 06:04 AM

2026 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக தமாகாவில் அமைப்புரீதியாக மாற்றங்கள் செய்யப்படும்: ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் சென்னை மண்டல நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் தி.நகரில் நேற்று நடைபெற்றது. படம்: ம.பிரபு

சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, தமாகாவில் அமைப்புரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் புதியஉறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற தமாகா போட்டியிட்ட 3தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

அதனால், கட்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக, சமீபத்தில் கட்சியின் 90 சதவீத மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகளை மாற்றிவிட்டு, புதியநிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில், கட்சியின் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் ஜி.கே. வாசன் தலைமையில் தி.நகரில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமாகா வலுவான இயக்கமாக செயல்பட, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அமைப்புரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டத் தலைவர் என்ற வகையில் புதிய மாவட்டத்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், சென்னை மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படுகிறது. நாளை (இன்று) கோவை மண்டல கூட்டம், 28-ம் தேதி மதுரை மண்டல கூட்டம், அன்றைய தினம் மாலை திருச்சி மண்டல கூட்டம் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 9 முதல் தமாகா புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணி நடைபெறவுள்ளது. கட்சியின் மாற்றங்கள் கட்சியின் வெற்றிக்கு அடித்தளாக அமையும்.

நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைவதற்கான அறிவிப்புகளை, மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். இந்தபட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இடம் பெறவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின் பட்ஜெட்டிலும் தமிழகம் உள்பட பல மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

தமிழகத்தின் திட்டங்களுக்கு கூடுதல் நிதி தேவை என்று மத்திய அரசிடம் நான் உரிமையுடன் கேட்பேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்ததில் அரசியல் காரணங்கள் உள்ளன. முதல்வர் தன் கடமையை தவறவிட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x