Last Updated : 16 May, 2018 09:12 AM

 

Published : 16 May 2018 09:12 AM
Last Updated : 16 May 2018 09:12 AM

பனங்காட்டுச்சேரி பாலாற்றின் குறுக்கே தடுப்பணைக்கு ஒப்புதல் கிடைப்பது தாமதம்: கடலோர விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை

பனங்காட்டுச்சேரியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க பொதுப்பணித் துறை வழங்கிய ரூ.52 கோடி திட்ட மதிப்பீட்டுக்கு, அணுமின் நிலைய நிர்வாகம் ஒப்புதல் அளிக்க தயக்கம் காட்டி வருவதால், பாலாற்று படுகையில் உப்புநீர் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம், சென்னை மாவட்ட குடிநீர் தேவையையும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் பாசன தேவையையும் பாலாறு பூர்த்தி செய்து வருகிறது. இதனால், பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள், பாலாறு பாதுகாப்பு அமைப்புகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் நகரியப் பகுதிகளில் வசிக்கும் ஊழியர்களின் தேவைக்கான குடிநீரை, பாலாற்றிலிருந்து பெற்றுவருவதால் தடுப்பணைக்கு நிதி அளிப்பதாக அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால், பொதுப்பணித் துறையின் பாலாறு கீழ்வடிநில கோட்டம் பணிகளைத் துரிதப்படுத்தவில்லை. எனினும், விவசாயிகளின் போராட்டங்களையடுத்து, பனங்காட்டுச்சேரி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.36 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து, அணுமின் நிலைய நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதைப் பரிசீலித்த நிர்வாகம், நிதி ஒதுக்க கடந்த 2016-ம் ஆண்டு சம்மதம் தெரிவித்தது.

அப்போது, அணையின் வடிவமைப்பை மாற்றி அமைத்து, மீண்டும் ரூ.52 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து, அணுமின் நிலைய நிர்வாகத்துக்கு பொதுப்பணித்துறை அனுப்பியது. இதனால், மும்பையில் உள்ள தலைமை நிர்வாகம், கூடுதல் நிதிக்கான காரணம் கேட்டு கடிதம் அனுப்பியது. இதையடுத்து, பொதுப்பணித் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், திட்ட மதிப்பீடு உயர்ந்ததால் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க அணுமின் நிலைய நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது. இதனால், பாலாற்று படுகையில் உப்பு நீர் ஊடுருவல் அதிகரித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு கூறும்போது, “அணுமின் நிலைய நிர்வாகம் தடுப்பணைக்கு நிதி அளிக்க தயாராக இருந்தது. ஆனால், பொதுப்பணித் துறை திட்ட மதிப்பீடுகளை அவ்வப்போது மாற்றியமைத்ததால், திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்காத நிலை உள்ளது. இதனால், விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என்றார்.

பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அமுதன் கூறும்போது. “அணுமின் நிலைய நிர்வாகம் மூலம் தடுப்பணை அமைக்க பொதுப்பணித் துறைக்கு விருப்பமில்லை. மேலும், முறையான திட்ட மதிப்பீடுகளைத் தயாரித்து மாநில அரசிடமிருந்து நிதி பெறுவதற்கான முயற்சிகளும் இல்லை. இதனால், பாலாற்றை நம்பியுள்ள விவசாயிகளின் நிலங்களில் உப்புநீர் ஊடுருவி வருகிறது” என்றார்.

பாலாறு நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் ரவிச்சந்திரன் கூறும்போது, “ரூ.52 கோடி மதிப்பிலான திட்டம் குறித்து, அனைத்து விதமான விளக்கங்களும் அணுமின் நிலைய நிர்வாகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x