Published : 08 May 2018 08:58 AM
Last Updated : 08 May 2018 08:58 AM
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழான ‘தி கார்டியன்’ (The Guardian) உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் ஆசியா கண்டத்தில் இந்தியாவில் நீலகிரி மலை ரயிலும், இலங்கையின் யாழ் தேவி ரயில் மற்றும் சீனாவின் குங்ஹாய் - திபெத் ரயில் ஆகிய மூன்று ரயில் பயணங்களை தேர்வு செய்துள்ளது.
நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில் 1899-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2005-ம் ஆண்டில் யுனெஸ்கோ வின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை உள்ள 46 கி.மீ. தூரத்தைக் கடக்க 250 பாலங்களையும், 208 வளைவுகளையும், 16 சுரங்கப் பாதைகளையும் கடந்து செல்ல வேண்டும்.
இந்த ரயில் பாதை மேல்நோக்கி செங்குத்தாக இருப்பதால் சுமார் 19 கி.மீ. தூரம் பல் சக்கர தண்டவாளப் பாதையில் பயணிக்கிறது. முன்னர் நீராவி இன்ஜினில் இயக்கப்பட்டு வந்த நீலகிரி மலை ரயில், தற்போது பயோ டீசல் இன்ஜின் மற்றும் பர்னஸ் ஆயில் கொண்டும் இயக்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நீலகிரி மலை ரயில் அதிக அளவில் ஈர்ப்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க இணையதளங்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
யாழ்தேவி ரயில்
இலங்கையில் உள்நாட்டு போர் நடந்து வந்ததால் சுமார் 25 ஆண்டுகளாக தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணப் பகுதிகளில் ரயில் சேவை முடங்கி இருந்தது. இந்தியா உதவியுடன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் யாழ் தேவி ரயில் சேவை, கடந்த 13.10.2014 அன்று தொடங்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ‘ஐஆர்சிஓஎன்’ இந்த ரயில் சேவைக்கான தண்டவாளங்களை மறுசீரமைப்பதில் முக்கியப் பங்காற்றியது. இது இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களுக்கிடையே சுமார் 350 கி.மீ. தூரத்தை இணைக்கிறது. யாழ்தேவி ரயில் இலங்கையின் வட மற்றும் தென்பகுதியையும் கலை, பண்பாடு, வர்த்தகம் என பலதரப்பட்ட வகைகளில் ஒன்றிணைக்கக் கூடியது. யாழ் தேவியில் பயணம் செய்ய முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு டிக்கெட் முன்பதிவை 30 நாட்களுக்கு முன்பே மேற்கொள்ள வேண்டும்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள குங்ஹாய் - திபெத் ரயில் பயணம்தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள ரயில் பாதை ஆகும். இது சீனாவின் குங்ஹாய் நகரிலிருந்து திபெத்தின் லாசா நகரம் வரை 1,910 கி.மீ தூரம் கொண்டது.
இந்த ரயில் பாதை ‘தங்குலா கணவாய்’ என்ற பகுதியை கடந்து செல்கிறது. இந்த தங்குலா கணவாய் கடல் மட்டத்திலிருந்து 5, 027 அடி உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT